Jun 19

சிரியாவுக்கு படைகள் அனுப்பப்பட மாட்டார்கள்: பாதுகாப்பு அமைச்சர்

கனேடிய படையினர் சிரியாவுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் தெரிவித்துள்ளார்.

ஐ.ஸ் அமைப்புக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து கனடாவின் இராணுவ திட்டமிடலாளர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

அத்துடன் ஈராக்கில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனேடிய படைகளின் நடவடிக்கையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதான முடிவினை கனேடிய மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இவை குறித்து விளக்கமளித்துள்ள கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான், ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான கனடாவின் புதிய நடவடிக்கைகளின் கீழும், கனேடிய படையினர் சிரியாவுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடாவின் தற்போதைய கவனம் ஈராக்கிலேயே உள்ளதாகவும், கனடாவின் அந்த நிலைப்பாடே தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைக்கு தமது தரப்பு ஈராக்கில் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களுக்கான இராணுவ வளங்களை மேலும் அதிகப்படுத்தி, அங்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் விளக்கமளித்துள்ளார்.