Nov 14

இடைக்கால தடையுத்தரவையடுத்து, நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடையுத்தரவை அடுத்து, நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது.

ஜனாதிபதியினால் கடந்த 4ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.

எனவே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமர்வில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனினும் குறித்த கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் மஹிந்த அணி இதுவரையில் எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.