Jun 19

சட்டத்தின் ஆட்சிக்கு தமிழகத்தில் வழிவிடவில்லை! தமிழரை அடிமைப்படுத்துதல் அன்றி இது வேறில்லை! மத்திய-மாநில ஆட்சிமுறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

தமிழகத்தில் தற்போது அரசியல் சாசனப்படியான சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. அப்படியொரு சூழல் நரேந்திர மோடியின் நடுவண் பாஜக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு உடன்பட்டு எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அம்மா அதிமுக அரசும் நடைபெறுகிறது.

இதற்கு எடுத்துக்காட்டுகள் பலவற்றை அடுக்க முடியும். என்றாலும் தற்போது வெடித்திருக்கும் இரண்டு பிரச்சனைகள் அதில் மிக மிக முகாமையானவை.

அவை: (1) எடப்பாடி அரசுக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் ஆதரவாக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க கோடிகளில் பண பேரம் நடந்தது என சரவணன் என்ற எம்எல்ஏ ஒருவரே பேசியதாக வெளியான வீடியோ.

(2) ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அம்மா அதிமுக வேட்பாளர் தினகரன் சார்பில் பணப் பட்டுவாடா செய்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோடையன், வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, ஜெயக்குமார், விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பது.

இந்த இரு விவகாரங்களிலும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகத்தில் கைப்பற்றிய ஒரு தாளின் அடிப்படையில் தேர்தலே நிறுத்தப்பட்டது. அமைச்சர்கள் மேல் வழக்குப் பதியவும் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தற்போது தகவல் வந்திருக்கிறது. ஆனால் எம்எல்ஏ சரவணன் பண பேரம் குறித்து பேசியதான வீடியோ இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவேயில்லை.

எதிக்கட்சியான திமுக சட்டமன்றத்தில் இதை எழுப்பியும் அதற்கு அனுமதியில்லை. ஆகவே திமுக நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. ஆளுநரிடமும் முறையிட்டிருக்கிறது.

ஆனால் தமிழக பாஜககாரர்கள் இதில் எந்த குற்றமும் இல்லை என சொல்லிவருவது அப்பட்டமான சட்டத்துக்குப் புறம்பான பேச்சு.

முதலமைச்சர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குப் பதியச் சொல்லி ஏப்ரல் 18ந் தேதியே உத்தரவிட்டிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். திரு. வைரக்கண்ணன் அவர்கள் போட்ட ஆர்டிஐ பெட்டிஷன்படி பெற்ற தகவல் அது. ஆனால் எடப்பாடி சிரித்துக் கொண்டே “அப்படியொரு தகவலே இதுவரை அரசுக்கு வரவில்லை” என்கிறார்.

அப்படியானால் வைரக்கண்ணன் ஆர்டிஐ பெட்டிஷன் போட்டதால்தான் வேறு வழியின்றி இப்போது அந்த தகவல் தரப்பட்டதா?

இது யோசிக்க வேண்டிய முகாமையான விடயம்.

அதாவது ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. பணப்பட்டுவாடா அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதியிழக்கச் செய்துவிட்டு மீதி வேட்பாளர்களை வைத்து தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். அதுதானே முறை?

ஆனால் அப்படிச் செய்யவில்லை. காரணம் திமுக வெற்றி பெறக்கூடாது என்ற ஒற்றைக் காரணம்தான். அது அதிமுக அணிகளுக்கு மட்டுமல்ல; தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மோடி அரசுக்குமான நோக்கம், திட்டம்.

தேர்தலை நிறுத்தியதற்கு காரண ஆதாரம் காட்டியாக வேண்டுமே என்ற நிலையிலேதான் இப்போது வைரக்கண்ணன் கேட்டதன் பேரில் வழக்குப் பதிய உத்தரவிட்டிருப்பதாக தகவல் தரப்பட்டிருக்கிறது.

ஆக மோடி அரசுக்கும் எடப்பாடி அரசுக்கும் இடையான புரிந்துணர்வின் பேரில்தான் காரியங்கள் நடைபெறுகின்றன என்று தெரிகிறது. அதேநேரம் இவை அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் என்பதும் தெளிவாகிறது.

மொத்தத்தில் சட்டத்தின் ஆட்சிக்கு தமிழகத்தில் வழிவிடப்படவில்லை என்பதுதான் குறிப்பிட வேண்டிய முகாமையான விடயம்!

இதற்கு தமிழக மக்களை அடிமைப்படுத்த வேண்டும், அடக்கி ஆள வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பாக நடக்கும் மத்திய-மாநில அரசுகளின் இத்தகைய ஆட்சிமுறையை வன்மையாக கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.