Nov 13

சிறிலங்கா மீது தீர்க்கமான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும்படி கனடிய தமிழர் பேரவை வேண்டுகோள்

அரசியல் சாசனத்துக்கு முரணாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா பாராளுமன்றத்தை கலைத்ததை கனடிய தமிழர் பேரவை கண்டிக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அரசியல் சாசனத்துக்கு முரணாகப் பிரதமராக நியமிக்க முயற்சி செய்திருந்தார். இந்த சாசன முரணான சதி தோல்வியைத் தழுவலாம் என்பதை அறிந்ததும் அவர் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டார்.

சடடத்தின் ஆட்சி, அரசியலமைப்பு, சர்வதேச நியமங்கள் போன்றவற்றை மீறும் போக்கைத் தவிருங்கள் என்று சிவில் சமூகங்கள், சிறுபான்மையினர், மேற்குலக ஜனநாயக நாடுகள், இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புக்கள் போன்றவற்றின் வேண்டுகோளைத் தற்போதைய ஜனாதிபதி தொடர்ந்தும் நிராகரித்து வருகிறார். இப் போக்கு சந்தேகத்திற்கிடமின்றி சிறிலங்காவை மீண்டும் அச்சமும் குழப்பமும் தரும் காலமொன்றிற்குள் தள்ளிவிடும். 

சிறிலங்கா மீண்டும் சட்டவாட்சி மற்றும் ஜனநாயக மரபுகளைப்  பேணும் வகையில் இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தடைகள் உட்பட்ட தீர்க்கமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி சர்வதேச சமூகத்தைக் கனடிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது. இது ஒன்றே சகலரும் அமைதி, நீதி, பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை அனுபவிப்பதற்கு ஏதுவான பாதையை  அமைத்துக் கொடுக்க வல்லது. 

கனடிய தமிழ்ச் சமூகம் இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் குழுமத்திலிருந்து சிறிலங்கா தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கனடிய அரசைகே கனடிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.