Jun 19

உண்மையில் விவசாயிகளுக்காக போராடுகின்றனரா? பொறாமையில் பொங்கும் விவசாயிகள் சங்க தலைவர்கள்

விவசாயிகளுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் சங்கத் தலைவர்கள், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைப்பட்டு சமூக வலைதளங்களில் விமர்சித்து கொள்வது, அவர்கள் உண்மையில் விவசாயிகளுக்காக போராடுகின்றனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு, காவிரி நீர் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகவும், வறட்சியால் வாடும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காகவும், பலவிதமாக போராடி வரும் விவசாய சங்க தலைவர்களில், முக்கியமானவர்களாக இருப்பவர்கள், அய்யாக்கண்ணு மற்றும் பி.ஆர்.பாண்டியன்.

ரூ.1 கோடி: இதில், அய்யாக்கண்ணு, தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கம் என்ற பெயரில், டில்லியில் விதவிதமான போராட்டங்கள் நடத்தி, நாடு முழுவதும் பிரபலமானவர். அதேபோல், தமிழக விவசாயிகளுக்காக காவிரி நீரைப் பெற்றுத் தரவேண்டும் என்று விதவிதமாக போராட்டங்கள் நடத்தியும், தினமும் அறிக்கைகள் விட்டும் வருபவர் பி.ஆர்.பாண்டியன்.

இவர்களின் போராட்டங்கள், உரிய பலனைக் கொடுக்கிறதா என்பதை விட, இவர்களின் போராட்ட படங்களும், அறிக்கையும் தினமும் பத்திரிகை, 'டிவி'க்களில் வருகிறதா என்பதில் அதிக கவனம் செலுத்துவர். நதிகள் இணைப்புக்காக நடிகர் ரஜினி, 1 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துள்ளதை, கேட்டுப் பெறுவதற்காக, நேற்று அவரை சந்திக்க, அய்யாக்கண்ணு, விவசாயிகளுடன் சென்றார். அப்போது, ரஜினி, அய்யாக்கண்ணுக்கு சால்வை அணிவித்து, வரவேற்றார்.

அணை கட்டாதே: இது குறித்து, சமூக வலைதளங்களில், பி.ஆர்.பாண்டியன் பதிவு செய்து உள்ள கருத்து: மத்திய அரசே, நதிகளை இணைக்க தயாரில்லை. இவர்கள் எங்கே இணைக்கப் போகின்றனர். காவிரி நீர், தமிழகம் வருவதை தடுத்து அணை கட்டுகிறான். அதை தடுக்க மத்திய அரசு மறுக்கிறது. காவிரி நீர் கேட்டதால், தமிழன் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது; தீ வைத்து கொளுத்தப்பட்டது.

அப்போது வாய் திறக்காத ரஜினி, 1 கோடி ரூபாய் கொடுத்து நதிகளை இணைக்கப் போகிறாராம். அய்யா அய்யாக்கண்ணு அவர்களே, காவிரியில் அணை கட்டாதே என்று ரஜினியை வாய் திறக்க சொல்லுங்கள். நதிகள் இணைப்பதை அப்புறம் பார்க்கலாம். காவிரி நீரின்றி தமிழகம் இல்லை. அதை விடுத்து, விளம்பரத்திற்காக காவிரி போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், பி.ஆர்.பாண்டியனுக்கு ஆதரவாக மயூதரன் என்பவர் செய்துள்ள பதிவில், 'ரஜினியைப் போய் பார்ப்பது என்றால், பார்த்து தொலைக்க வேண்டியது தானே. எதுக்கு இந்த வேலை. 'காவிரி நதிநீர் என்பது தமிழர்களின் உரிமை. அதை தடுப்பது குறித்து தட்டிக் கேட்க வக்கற்றவனிடம் கையேந்துவது விளம்பரத்திற்காகவே' என கூறியுள்ளார்.

இது, அய்யாக்கண்ணு தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களும், பதிலுக்கு பி.ஆர்.பாண்டியன் குறித்து, விமர்சனம் செய்த தயாராகி வருகின்றனர். இப்படி, ஒருவருக்கு ஒருவர், புகழ் பெற்று விடக்கூடாது என பொறாமையில் பொங்கி வழியும் தலைவர்கள் தான், காவிரி நீரை பெற்றுத் தருவர்; அரசின் உதவிகளையும், கடன் தள்ளுபடியையும் பெற்றுத் தருவர் என, விவசாயிகள் நம்புகின்றனர்.