Mar 19

பன்னீர்செல்வத்தினை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் டி.டி.வி.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க.துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆதன் பின்னர் வர் நிருபகர்களிடத்தில் கூறியதாவது,

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் சிங்கப்பூர் குடிமகன் என சிலர் கூறி வருகிறார்கள். 

நான் இந்திய குடிமகன். 1999ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன்.

2004ஆம் ஆண்டு மேல்சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளேன். நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடுவது உறுதி. 

தலைமை தேர்தல் ஆணையகம் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு தான் ஒதுக்கும். பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர். எனவே, இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படும்.

ஓ.பன்னீர்செல்வம், அவரை நம்பி வந்த சிலரை தக்க வைப்பதற்காக இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறி வருகிறார். 22ஆம் திகதி தேர்தல் ஆணையகம் எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்டம் முடிந்து விடும். அவரை நம்பி சென்ற அனைவரும் காணாமல் போய்விடுவார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த நாட்களில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதுவும் கூறாமல் இருந்தார். ஆனால் அவரிடம் இருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட சில நாட்களில் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். 

7½ கோடி தமிழக மக்களை ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்ற பார்க்கிறார். எங்களுக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்துவது குறித்து கவலையில்லை. எங்கள் மடியில் கனமில்லை. அதனால் எங்களுக்கு பயமில்லை. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.

பெரியகுளத்தில் சாதாரண ஆளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது பிரதமரை சந்திக்க விமானத்தில் சென்று வருகிறார். அவரது மகன்கள், மருமகள்கள், உறவினர்கள் அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறார்கள். 

ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்துக்கள் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

1½ கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது என்றார்.