Jun 18

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுவதை தடுக்க முடியாது; ரெலோ ஸ்ரீகாந்தா எச்சரிக்கை

வட  மாகாண சபையின்  விவகாரம் இழுபட்டுச் செல்லும் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு தொடர்ந்து வேட்டு வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம். எனவே   நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை உடனடியாக கைவிடுமாறு இரா.சம்பந்தன் உறுதியோடு கட்டளையிட வேண்டும்  என்று  ரெலோக் கட்சியின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

 

 

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

வட  மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பொறுத்தமட்டில் சூத்திரதாரிகள் யார்? அந்த சூத்திரதாரிகளில் முகவர்களாக   செயற்பட்டுக்கொண்டிருப்பவர்கள் யார்? என்பதையெல்லாம் நாங்கள் நன்கு அறிவோம்.

 

இருந்தாலும் இதுவரை அதுபற்றி பேசியதில்லை. இப்பொழுது கூட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை கருதியும் எதிர்கால நலன்கருதியும் அதைப் பற்றிப் பேச நாங்கள் விரும்பவில்லை. இந்த விவகாரம் இழுபட்டுச் செல்லும் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு தொடர்ந்து வேட்டு வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

இந்த விவகாரத்தை இனத்தின் நலன்கருதி சுமூகமான முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனையே சார்ந்திருக்கிறது. இரா.சம்பந்தன் தமிழரசுக்க கட்சியின் உத்தியோகபூர்வமான தலைவராக இன்று இல்லாவிட்டாலும் கூட அந்தக் கட்சியின் பெருந்தலைவராக அவர் தொடர்ந்து நீடிக்கின்றார் என்பதை தமிழ்மக்கள் நன்கறிவார்கள்.

 

தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவர் மாத்திரமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இரா.சம்பந்தனே அங்கீகரிக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உடனடியாக விரைந்துதேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு இரா.சம்பந்தனைச் சார்ந்திருக்கிறது.

 

 நம்பிக்கையில்லாத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை உடனடியாக கைவிடுமாறு இரா.சம்பந்தன் உறுதியோடு கட்டளையிட வேண்டும். அவரால் கட்டளையிட முடியும். இன்றைய நிலையில் தேவைப்படுவது இதுவொன்றுதான்.

 

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கைவிடப்படுமானால் அதற்குப் பின்னர் அது தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்து   தமிழத்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் கூடிப்பேசி தேவையான நடவடிக்கைகளை எடுக்கமுடியும். எடுக்குமாறு முதலமைச்சரை கோரவும் முடியும். ஆனால் இப்பொழுது தேவைப்படுவது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லத் தீர்மானம் கைவிடப்படுவதேயாகும். 

 

இதனை இரா.சம்பந்தன் உறுதிப்படுத்துவார் என்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஒருவேளை இரா.சம்பந்தன் அதைச் செய்யத் தவறினால் அல்லது அவரால் அதைச் செய்ய முடியாமல் போனால் தமிழத்தேசியக் கூட்டமைபு துண்டு துண்டாகச் சிதறுவதை அவரும் பார்ப்பார். உலகமும் பார்க்கும் என்றார்.