Jun 18

சாம்பியன்ஸ் டிராபி: குலை நடுங்குது பாக்., இன்று 'விறுவிறு' பைனல்

 உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஏற்கனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை சாய்த்த இந்திய அணி, மீண்டும் அசத்தி கோப்பை வெல்ல காத்திருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 'டாப்-8' அணிகள் களமிறங்கின.

தொடரை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் வெளியேறின. இதையடுத்து, லண்டன் ஒவல் மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில், விளையாட்டு உலகின் 'பரம எதிரிகள்' என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துவக்கம் நம்பிக்கை

லீக் சுற்று (3), அரையிறுதி என, 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் பைனலுக்கு முன்னேறியது இந்தியா. அணிக்கு ஷிகர் தவான் (317 ரன்), ரோகித் சர்மா (304 ரன்) ஜோடி சிறப்பான துவக்கம் (136, 138, 23 மற்றும் 87) தருகிறது. இருவரும் தலா ஒரு சதம், 2 அரைசதம் அடித்துள்ளனர். முதல் விக்கெட்டுக்கு இவர்களது சிறப்பான ரன்குவிப்பு காரணமாக, அடுத்த வரும் வீரர்களின் பேட்டிங் எளிதாகிறது.

ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள இவர்கள், இன்றைய பைனலிலும் சாதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கேப்டன் எழுச்சி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எழுச்சி பெற்ற கேப்டன் கோஹ்லி இதுவரை 3 அரைசதம் உட்பட 253 ரன்கள் குவித்துள்ளார். தவிர, 'சேஸ்' மன்னன் என்ற பெயருக்கு ஏற்ப, தென் ஆப்ரிக்கா (76), வங்கதேசத்துக்கு (96) எதிராக அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.

கேப்டன் பணியில் 'சீனியர்களின்' ஆலோசனைக்கு செவி சாய்க்கும் கோஹ்லி, மீண்டும் ஜொலித்து, தனது வெற்றி மகுடத்தில், சாம்பியன்ஸ் கோப்பையை ஏற்றி அழகு பார்ப்பார் என நம்புவோம்.

'மிடில்' எப்படி

அடுத்து வரும் யுவராஜ் சிங், 300 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற உற்சாகத்தில் உள்ளார். லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 ரன்கள் குவித்து, போட்டியை இந்தியா வசம் திருப்பினார். இன்றும் பொங்கி எழுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

'சீனியர்' உதவி

இத்தொடரில் சரியான நேரத்தில் தேவையான ஆலோசனை தந்து அணியின் வெற்றிக்கு கைகொடுக்கிறார் அனுபவ தோனி. 'பவுலிங்' 'ஆல் ரவுண்டர்' பாண்ட்யா, சுமார் ரகம் தான். மற்றபடி கேதர் ஜாதவ், ஜடேஜாவும் உதவுவர்.

உதவும் 'வேகம்'

பவுலிங்கில் எதிர்பார்த்தபடியே வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் (6 விக்.,), பும்ரா (4) கூட்டணி எதிரணியை மிரட்டுகிறது. இன்றும் இவர்கள் அசத்த வேண்டும்.

'சுழலில்' ஜடேஜா (4 விக்.,) பரவாயில்லை என்றாலும், 'சீனியர்' அஷ்வின் செயல்பாடு ஏமாற்றம் தருகிறது. இவரது கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் (60/0, 63/0, 65/3, 60/0, 43/1, 54/0) 4 விக்கெட்டுகள் தான் வீழ்த்தியுள்ளார்.தவிர, பாகிஸ்தான் அணியினர் சுழலை சிறப்பாக எதிர்கொள்வர் என்பதால், அஷ்வினுக்குப் பதில் மீண்டும் உமேஷ் யாதவ் (2) களமிறங்கலாம்.

சர்பராஸ் பலம்

இந்தியாவுக்கு எதிரான முதல் தோல்விக்குப் பின், பாகிஸ்தான் அணி எழுச்சி பெற்றது. சற்றும் எதிர்பார்க்காமல் இங்கிலாந்தை சாய்த்து, பைனலுக்கு வந்துள்ளது.அசார் அலி (169), புதிய வரவு பகர் ஜமான் (138) கூட்டணி, வலுவான துவக்கம் தருகிறது. 'மிடில் ஆர்டரில்' முகமது ஹபீஸ், 'சீனியர்' சோயப் மாலிக் நம்பிக்கை தருகின்றனர். கேப்டன் சர்பராஸ் அகமது மற்ற வீரர்களுக்கு முன் மாதிரியாக செயல்படுகிறார்.

ஹசன் 'டாப்'

பவுலிங்கில் வகாப் ரியாஸ் காயம் காரணமாக விலகிய போதும், இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஜுனைடு கான் (7), முகமது ஆமிர் (2) கூட்டணி, தொல்லை தரும் எனத் தெரிகிறது. 'சுழலில்' இமாத் வாசிம், ஷதாப் கான் உள்ளனர்.

லீக் சுற்றில் இந்திய அணி 319/3 ரன்கள் குவிக்க, பாகிஸ்தான் 164/10 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. இதனால் இன்றும் இந்தியா அசத்த அதிக வாய்ப்பு உள்ளது.