Jun 17

சீன-ஹங்கேரிய முதலாவது சரக்கு ரயில் புடபெஸ்ட்டை வந்தடைந்துள்ளது

மத்திய சீன நகரத்திலிருந்து புறப்பட்ட ஹங்கேரிக்கான முதலாவது சரக்கு ரயில் புடபெஸ்ட்டை வந்தடைந்துள்ளது.

மத்திய ஹூனான் மாகாணத்தில் தலைநகரான சாங்ஷாவிலிருந்து கடந்த 27 ஆம் திகதி தனது பயணத்தினை ஆரம்பித்த குறித்த சரக்கு ரயில் ரஷ்யா மற்றும் உக்ரைன் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் பயணத்தை மேற்கொண்டு நேற்று (வெள்ளிக்கிழமை) ஹங்கேரி தலைநகர் புடபெஸ்ட்டை வந்தடைந்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யா மோதல் வெடித்த பின்னர் உக்ரைனூடாக பயணிக்கும் முதலாவது சீன-ஐரோப்பிய சரக்கு ரயில் இதுவாகும்.

41 பெட்டிகளுடன் இலத்திரனியல் சாதனங்கள், காலணிகள், ஆடைகள், கண்ணாடி இழைக் கேபிள்கள், வன்பொருள் மற்றும் இயந்திர பாகங்களை சுமந்தவாறு குறித்த சரக்கு ரயில் ஹங்கேரியை வந்தடைந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஹங்கேரி தேசிய அபிவிருத்தி அமைச்சின் துணைச் செயலாளர், ‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். ஒரே பாதை ஒரே பிராந்திய முனைப்பின் கீழ் சீனா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் தமது பொருளாதார கூட்டுறவை ஆரம்பித்த பின்னர் ஹங்கேரியை வந்தையும் முதலாவது சரக்கு ரயில் இதுவாகும். இவ்விரு நாடுகளும் சிறந்த பொருளாதார உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளன. இது ரயில் போக்குவரத்தை மேம்படுத்தியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியின்; இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா காணப்படுகின்ற நிலையில் ரயில் மற்றும் கடல் மார்க்க போக்குவரத்துக்கள் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் பங்களிக்கின்றன.

கடந்த ஆண்டில் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இருதரப்பு வர்த்தகம் இந்த ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.