Oct 23

எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் இரத்தம் சிந்தாத நாடாக இருப்பதற்கு பிராத்திப்போம்

யுத்தம் மற்றும் இனமோதல்கள் காரணமாக நாடு முன்னேற்ற நிலையில் இருந்து பின்தள்ளப்பட்டிருக்கின்றது.எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் இரத்தம் சிந்தாத நாடாக இருப்பதற்கு பிராத்திப்போம் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

கல்வி அமைச்சு, இலங்கை பாராளுமன்றம் கெபே அமைப்பு மற்றும் யூ,எஸ். அய்ட் என்பன இணைந்து நாமே மக்கள் நாமே ஜனநாயகம் எனும் தொனிப்பொருளில் மாவட்ட மற்றும் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடத்திய சித்திரப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு இன்று இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்

ஒருசிலரின் நடவடிக்கையால் அம்பாறையிலும் கண்டி திகன பிரதேசத்திலும் இடம்பெற்ற வன்முறையால் இலங்கையின் பெயருக்கு கறுப்புப் புள்ளி இடம்பெற்றுள்ளது. 

உயிர்கள் பழியெடுக்கப்பட்டன. கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. எதிர்காலத்தில் இவ்வாறு இனங்களுக்கிடையில் இரத்தம் சிந்தாத நாடாக மாற்றியமைப்பதே எமது பிராத்தனையாகும். அதற்காக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாராளுமன்றம் ஊடாக எங்களால்  முடியுமான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.  

அத்துடன் பாரளுமன்றத்தினூடாக ஜனநாயகத்தை நிலைநாட்ட எங்களால் மேற்கொள்ளவேண்டிய முயற்கிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பேறுபாடு இன்றி அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பதற்கு போதுமானளவு நேரத்தை  வழங்கியுள்ளோம்.

எனவே மாணவர்கள் மத்தியில் இவ்வாறான சித்திரப்போட்டிகளை நடத்துவதன் மூலம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.