Oct 23

rகாமினி செனரத்துக்கு எதிரான வழக்கு நவம்பர் 07 முதல் தொடர் விசாரணைக்கு


ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, நவம்பர் 07 ஆம் திகதியில் இருந்து தினந்தோறும் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

முன்னதாக குறித்த வழக்கை இம்மாதம் 30ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்று பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (23) விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.