Oct 15

வரவு செலவுத்திடத்தை எதிர்த்து வாக்களிக்கும் துனிவு கூட்டமைப்பிடம் இருக்கிறதா ? - யதீந்திரா


அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு சவாலாகவே மாறியிருக்கிறது. தமிழ் சிவில் வெளியில் இது தொடர்பான கரிசனை அதிகரித்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைக்க வேண்டுமானால், ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலைமை கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, கூட்டமைப்பினர் கூறிய விடயங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. கூட்டமைப்பினரை பொருத்தவரையில் இது ஒரு பெரும் அரசியல் தோல்வி. பொதுவாகவே தோல்விகள் தமிழ் அரசியலுக்கு புதிதல்ல என்றாலும் கூட, எப்போதுமே அதிகாரத்தில் இருக்கும் தரப்பொன்றின் மீதுதான் குற்றச்சாட்டுக்கள் நீளும். அந்த வகையில்தான் கூட்டமைப்பு விமர்சிக்கப்படுகிறது. நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பின்புலத்தில்தான் கூட்டமைப்பினர் அரசியல் கைதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு நாள் விவாதமொன்றை கோரியிருக்கின்றனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றனர். அவர் கை விரித்துவிட்டார். பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டனர். அவரும் கையை விரித்துவிட்டார். ஜனாதிபதி செயலணியில் பேசிப் பார்த்தனர் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில் பாராளுமன்றத்தில் பேசிப் பார்ப்போம், அங்காவது ஏதாவது நடக்கின்றதா என்று பார்க்கலாம் என்னும் அடிப்படையில்தான், தற்போது ஒரு நாள் விவாதத்தை கோரியிருக்கின்றனர். கூட்டமைப்பின் இவ்வாறான அணுகுமுறையே அவர்களின் தோல்விக்கு சான்றுபகர்கிறது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பிரதான அரசியல் கட்சி, தான் ஆதரிக்கும் ஒரு அரசாங்கத்திடம் ஏன் இந்தளவு இரந்து நிற்கிறது? ஏன் கூட்டமைப்பை கண்டு அரசாங்கம் ஒரு சிறிதளவு கூட அச்சப்படவில்லை? - இத்தனைக்கும் சம்பந்தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் கூட.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அரசாங்கத்தின் அனைத்து விடயங்களுக்கும் சம்பந்தன் முண்டுகொடுத்து வந்திருக்கிறார். குறிப்பாக கடந்த மூன்று வருடங்களில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் உப அமைப்பு போன்றே கூட்டமைப்பு செயற்பட்டு வந்திருக்கிறது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கூறுகின்ற போது, இப்படிச் சொன்னார். எனது கடந்த மூன்றுவருட கால அனுபவத்தில் நான் கண்டது ஒன்றுதான். பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏதுமென்றால் எங்களின்ர ஜயா குதித்து எழும்புவார் தெரியுமா, ஆனால் அதே ஜயா மக்களின் பிரச்சினை என்றால் வாயை மூடிக்கொண்டிருப்பார்.

இப்படியெல்லாம் ரணிலுக்கு விசுவாசம் காண்பித்த சம்பந்தனுக்கு அரசியல் கைதிகள் விடயத்தில் ஏன் ரணில் விக்கிரமசிங்கவினால் உதவ முடியாமல் இருக்கிறது? இதற்கு என்ன காரணம். கூட்டமைப்பை தமிழ் மக்களின் தலைமையாக அரசாங்கம் கருதவில்லையா? ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போதும் சம்பந்தன் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தார். அப்போது ரணிலுடன் ஒரு எழுத்து மூல உடன்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்ட பிரச்சினைகளில் எத்தனை விடயங்கள் இதுவரை தீர்த்துவைக்கப்பட்டுள்ளன? கூட்டமைப்பின் தலைவர்களால் இது தொடர்பில் பகிரங்கமாக மக்கள் முன்னால் வர முடியுமா? முக்கியமாக சம்பந்தனால்?

கடந்த மூன்று வருடங்களில் சம்பந்தன் தரப்பு குறிப்பிட்ட எந்தவொரு விடயத்திலும் முன்னேற்றங்களை காண்பிக்க முடியவில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கத்தை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாதுகாக்கும் பணியை சம்பந்தன் தரப்பு மிகவும் சிறப்பாகவே மேற்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அரசாங்கமோ சர்வதேச அரங்குகளில் சிறிலங்கா அரசை பாதுகாக்கும் முயற்சியையே மேற்கொண்டு வருகிறது. அண்மையில் கூட மங்கள சமரவீர தங்களின் அரசாங்கமே மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றங்களிலிருந்து காப்பாற்றியதாக குறிப்பிட்டிருந்தார். அது உண்மையாயின் அதில் சம்பந்தனுக்கும் ஒரு பெரிய பங்குண்டல்லவா? சில தினங்களுக்கு முன்னர் ஒக்ஸ்போட் யூனியனில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச தலையீட்டிற்கு அவசியமில்லை என்று கூறியதுடன், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இராணுவத்தையே விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம், ரணிலின் கூற்று தொடர்பில் சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ வாய்திறக்கவில்லை. ரணில் தொடர்பில் அமைதிகாக்கும் சுமந்திரன் அண்மைக்காலமாக ஜனாதிபதி மைத்திரிபால தொடர்பில் உரத்துப் பேசுவதையும் காணலாம். அது ஏன்? ஏனெனில் கூட்டமைப்பின் தலைவரை எப்படி கூட்டமைப்பால் விமர்சிக்க முடியும்?

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற போதிலும் கூட, கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கம் சமர்ப்பித்த சகல வரவு செலவுத்திட்டங்களையம் எவ்வித கேள்வியுமின்றி சம்பந்தன் ஆதரித்து வந்திருக்கிறார். ஆனால் இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற நன்மை என்ன? இத்தனைக்கும் விலை வாசிகள் படுமோசமாக உயர்ந்து வருகின்ற நிலையிலும் கூட, சம்பந்தன் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவே வாக்களித்து வருகின்றார். கடந்த மூன்று வருடங்களாக அமைதியாக அரசாங்கத்தின் பின்னால் இழுபட்டுக் கொண்டிருந்த சம்பந்தன் தற்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஒரு நாள் விவாதத்தை கோருகின்றார். இதனை ஏன் கடந்த மூன்று வருடங்களாக கோரவில்லை?

கூட்டமைப்பின் உண்மையான பிரச்சினை என்ன? ஏன் அரசாங்கத்தை கண்டு கூட்டமைப்பு அச்சப்படுகிறது? 2015இல் இணை அனுசரனை வழங்கி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை சர்வதேசத்தின் அனுசரனையுடன் அமுல்படுத்துவதாக வாக்குறியளித்த மைத்திரி- ரணில் அரசாங்கம் தற்போது அதற்கு எதிராகவே பேசி வருகிறது. எங்களுடைய பிரச்சினையை எங்களை பார்க்கவிடுங்கள் என்கிறது. ஆனால் அரசாங்கத்தின் இந்த அனுகுமுறை தொடர்பில் கூட்டமைப்போ வாய்திறக்கவில்லை. வாய்திறக்க அஞ்சுகின்றது. பொதுவாக கடன்பட்டவர்கள்தான், கொடுத்தவர்களை பார்த்து அஞ்சுவார்கள். அப்படியாயின் சம்பந்தனும் தான் வாக்கிய ஏதாவதற்கு அஞ்சுகிறாரா?

இவ்வாறானதொரு சூழலில்தான் அரசாங்கம் அடுத்த வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவில்லையாயின் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பார்களா? அதற்கான துனிவு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருக்கிறதா? ஒரு வேளை சம்பந்தனும் சுமந்திரனும் கூறினாலும் கூட, அதனை புறக்கணித்து, தங்களின் எதிர்ப்பை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளால் காண்பிக்க முடியுமா? இது தொடர்பில் சிலர் இப்படிக் கேட்கலாம் - எதிர்ப்பை காண்பிப்பதால் என்ன வந்துவிடப் போகிறது? ஒரு வேளை அது சரியாகவும் கூட இருக்கலாம் ஆனால் ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருப்பதால் என்ன வந்துவிட்டது?