Jun 15

லண்டன் தீ விபத்து குறித்து முறையான விசாரணை: பிரதமர் உறுதி

மேற்கு லண்டனில் 12 பேரின் உயிர்களை காவுகொண்ட கிரென்ஃபெல் அடுக்குமாடி கட்டட தீச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

இது குறித்து நேற்று (புதன்கிழமை) தொலைக்காட்சி அறிக்கையொன்றை வெளியிட்ட தெரேசா மே, “சம்பவ இடத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு, மீட்புப் பணிகளும் நிறைவடைந்த பின்னர் தீ ஏற்பட்டமைக்கான காரணத்தினை அடையாளம் காணும் வகையில் முறையான விசாரணைகள் இடம்பெறும்.

அதுவரையில், அவசரசேவைப் பணிகள் தொடர்வதிலும் துன்பகரமான சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் மற்றும் ஆதரவுகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமது அரசாங்கத்திற்கான ஆதரவை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வட அயர்லாந்தின் ஜனநாயக ஒன்றியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையின் போது, அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ குறித்தே பெருமளவில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.