Jun 15

வளைகுடா நெருக்கடிகளுக்கு தீர்வுகாண பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

கட்டார் மற்றும் அதன் வளைகுடா அயல்நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகள் விரிவடைவதற்கு அனுமதிக்கக் கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) மொராக்கோ விஜயத்தின் போது இமானுவல் மக்ரோங் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, கட்டார் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை அதிகரிப்பதில் தமக்கு எவ்வித ஆர்வமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டார் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இம்மாத ஆரம்பத்தில் கட்டாருடனான இராஜதந்திர, வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை துண்டித்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வடஅமெரிக்காவுக்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள இமானுவல் மக்ரோங் மொராக்கோ மன்னர்  மொஹமட்டுடனான (Mohammed VI) சந்திப்பின் போது லிபிய விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முவம்மர் கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து லிபியாவில் ஸ்திரமற்ற தன்மையே நிலவுகின்றது. இத்தகைய நிலையற்ற தன்மை லிபிய மக்கள் புலம்பெயர்ந்து செல்வதற்கும் வழிவகுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.