Jun 15

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் இந்தியா - வங்காளதேச அணிகள் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன.இங்கிலாந்தில் நடந்து வரும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டி விட்டது.

பர்மிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2-வது அரைஇறுதியில், ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் இந்தியா, ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.அரைஇறுதியிலும் இந்திய அணி மிகவும் ஜாக்கிரதையாக ஆட வேண்டியது அவசியமாகும். ஒரு காலத்தில் கத்துக்குட்டி அணியாக இருந்த வங்காளதேசம் இன்று எதிரணிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. அதுவும் இந்தியா என்றாலே அவர்களது வீரர்களும், ரசிகர்களும் வெறித்தனமாகி விடுகிறார்கள். அதனால் இந்திய வீரர்கள் எந்த வகையிலும் சோடை போக மாட்டார்கள் என்று நம்பலாம்.

இந்தியாவும், வங்காளதேசமும் இதுவரை 32 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 26-ல் இந்தியாவும், 5-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

சாம்பியன்ஸ் கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, புவனேஷ்வர்குமார்.

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், சபிர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், தஸ்கின் அகமது, மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.