Oct 11

பாரிஸின் உள்ளக நகர திராட்சைத் தோட்டங்களில் அறுவடை திருவிழா ஆரம்பம்!

பாரிஸின் திராட்சை அறுவடைத் திருவிழா ஆரவாரமாக ஆரம்பித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) தொடக்கம் மொன்ட்மார்ட்ரே மாவட்டத்தில் உள்ள திராட்சைத் தோட்டங்களில் மிகவும் செழிப்பான திராட்சைப் பழங்கள் விவசாயிகளுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரும் வகையில் அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த அறுவடை பணிகள் இடம்பெறும். மொன்ட்மாட்ரே சமூகத்தின் வைன் தயாரிப்பு கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் சில நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இதன்போது, திராட்சைத் தோட்டத்தில் வழிகாட்டும் சுற்றுப்பயணங்கள், வைன் சுவைபார்த்தல், பிராந்திய தயாரிப்பு பொருட்களை சுவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் மொன்ட்மார்ட்ரே நகரின் தெருக்களில் அணிவகுத்துச் செல்லும் நிகழ்வுகள் என்பன உள்ளடங்குகின்றன.

மொன்ட்மார்ட்ரே நகர் பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியில் திராட்சைத் தோட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து பாரிஸ் நகரை முழுவதுமாக பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது

மொன்ட்மார்ட்ரே மாவட்டத்தின் நகர்ப்புறங்கள் பெருநகர எல்லைகளுக்குள் வருவதற்கு முன்னதாக, அதன் மலைப்பகுதிகள் முழுமையாக திராட்சைத் தோட்டங்களால் மூடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மொன்ட்மார்ட்ரேக்கு நெருக்கமான பகுதிகளில் மாத்திரமே திராட்சைத் தோட்டங்கள் எஞ்சியுள்ளன.

50 சென்றிலீற்றர்களைக் கொண்ட 1,400 போத்தல்கள் மொத்தமாக தயாரிக்கப்படும் நிலையில் அவை பாரிஸின் 18 வது உப தொகுதியின் நன்கொடை தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக முதியோருக்கான உணவு தேவைகள், நத்தார் பண்டிகையின் போது சிறார்களுக்கான உணவு மற்றும் நடவடிக்கைகள் என்பன இதனூடாக முன்னெடுக்கப்படுவதாக மொன்ட்மார்ட்ரே வரலாற்று சங்கத்தின் தலைவர் ஜூன் மெனுவெல் காபெட் தெரிவித்தார்.