Oct 11

பிரெக்சிற்: பாதுகாப்பு விடயத்தில் ஜேர்மனி கரிசனை

பிரெக்சிற்றிற்குப் பின்னரும் பிரித்தானியாவுடன் நெருங்கிய தொடர்பை பேண விரும்புவதாக ஜேர்மனி அதிபர் அங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாதுகாப்பு விடயத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் அதிபர் நேற்று (புதன்கிழமை) அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

பிரெக்சிற் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜேர்மன் அதிபர், அவை ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதேவேளை வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட அயல் நாடுகளுடனான வர்த்தக தொடர்புகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டுமென கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் வலியுறுத்தியிருந்தார். இவை குறித்த பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் சுமூக தீர்வை காணலாம் என்றும் ஜேர்மன் அதிபர் மேலும் தெரிவித்தார்.