Oct 10

பிரான்ஸ் விமான நிலையத்தில் மோதல்: ராப் பாடகர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

பிரான்ஸைச் சேர்ந்த இரண்டு ராப் பாடகர்கள் பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் வைத்து கூச்சலிட்டு மோதிக் கொண்ட சம்பவத்தை அடுத்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானங்களை தாமதிக்க செய்தமை, வௌியேறும் வாயிலை சேதப்படுத்தியமை மற்றும் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தினால் அவர்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பூபா மற்றும் காரிஸ் (Booba and Kaaris) என்ற மேடைப் பெயர்களைக் கொண்ட குறித்த ராப் பாடகர்களுக்கு 50,000 யூரோக்கள் (57,000$) அபராதத்துடன், 18 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோசமான செயற்பாடு மற்றும் நிஜவாழ்க்கையில் வன்முறையில் ஈடுபட்ட ஜனரஞ்சக ராப் நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச தண்டனையாக இது கருதப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஓர்லி விமான நிலையத்தில் குறித்த இரண்டு ராப் நட்சத்திரங்களும், அவர்களின் சகாக்கள் சிலரும் இருதரப்பு மோதலில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் 3 வாரங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.