Jun 14

பரிஸ் உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்ய ஆர்வம் இல்லை

ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி-20 தலைவர்கள் மாநாட்டிற்கான கூட்டறிக்கையில் பரிஸ் காலநிலை மாற்றம் குறித்த அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கலிடம் தாம் வலியுறுத்தவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் ஜி-20 மாநாடு ஜேர்மனியில் நடைபெறவுள்ள நிலையில், கடந்த வாரம் ஜேர்மனிய அதிபர் மற்றும் கனேடிய பிரதமர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சமாதானப்படுத்தும் வகையில் பரிஸ் உடன்படிக்கை குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் என ரூடோ கேட்டுக் கொண்டதாக ஜேர்மனிய செய்திப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கனேடிய பிரதமர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த கனேடிய சுற்றுச்சூழல் அமைச்சர் கத்தரின் மக்கென்னா, பரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதில் கனடாவுக்கு எவ்வித ஆர்வமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் காலநிலை மாற்றம் குறித்த அழுத்தத்தை தக்கவைத்துக் கொள்வதில் கனடா உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.