Jun 14

ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவு எப்போதும் பிரித்தானியாவுக்காக திறந்திருக்கும்

பிரித்தானியா தனது எண்ணத்தை மாற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க விரும்பினால் அதற்கான கதவு எப்போதுமே திறந்திருக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங்கிற்கும், பிரித்தானிய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேற்படி சந்திப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி, பிரித்தானியா தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வதாயின் அதனையும் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க விரும்பினால், அதற்கான கதவு பிரித்தானியாவிற்கு எப்போதும் திறந்திருக்கும் என்றார்.

ஆனால் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதிலிருந்து பின்வாங்குவது கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.