Jun 14

உச்சநீதிமன்றில் உயர்பதவி வகித்த முதல் பெண் ஓய்வு பெறுகின்றார்

கனேடிய உச்சநீதிமன்றில் உயர்பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமைக்குரிய தலைமை நீதிபதி பெவர்லி மக்லாக்லின் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய உச்ச நீதிமன்றில் 28 வருடங்கள் பணியாற்றிய மக்லாக்லின், 18 வருடங்கள் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றின் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மக்லாக்லின் 11 ஆண்டுகளுக்கு பின்னர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவருடைய தலைமையில் கனேடிய உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புக்களை கண்டுள்ளது. முதல்குடி மக்களை பாதிக்கும் வகையிலான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பழங்குடி மக்களுக்கு ஆலோசனை வழங்கவும் அவர்களுக்கு இடமளிப்பதற்குமான கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை தெளிவுபடுத்தியது மாத்திரமன்றி சுதேச உரிமைகளை பலப்படுத்தும் வகையிலான பல தீர்ப்புக்களையும் இவர் வழங்கியுள்ளார்.

மக்லாக்லின் சட்டபூர்வமாக ஓய்வுபெறும் காலம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமாகும். எனினும் ஒன்பது மாதங்களுக்கு முன்னதாக இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி மக்லாக்லின் பதவிவிலகவுள்ளார்.