Jun 14

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் பயங்கரம்!! பதட்டம் அதிகரிப்பு!!

லண்டனில் உள்ள 27 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தினால் கட்டிடமே சிறிது சிறிதாக இடிந்து விழும் அபாயத்தால் பதட்டம் அதிகரித்து வருகிறது.

தீ விபத்துக்குள்ளான அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 1974ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 27 மாடிகளும், மொத்தம் 120 வீடுகளும் உள்ளன. தீயை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீவிபத்தில் இருந்து தப்பிக்க அடுக்குமாடி கட்டிடத்திற்குள் மக்கள் தவிப்புடன் சுற்றி வருவதாக செய்தி வெளியாகி வருகிறது. இதுவரை சுமார் 6 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டு உள்ளனர் என்றும், சிலர் அடுக்குமாடிகளில் இருந்து கீழே குதித்து வரும் காட்சிகளும் வெளியாகி வருகின்றன. பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை லண்டனில் இல்லாத அளவிற்கு இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கதவுகளை தட்டியும், ஜன்னல்கள் வழியாகவும் சப்தமிட்டு பரிதவித்து வருகின்றனர். 15 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக தீ எரிந்து ஏறக்குறைய அனைத்து மாடிகளுக்கும் பரவி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடமே தீயில் எரிந்து கொண்டிருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி வருகிறது.

தற்போது கட்டிட தீ விபத்தின் உக்கிரம் அதிகமாகி கட்டிடமே சிறிது சிறிதாக இடிந்து விழுவதாக செய்தி வெளியாகி வருகிறது.