Jun 14

இவிங்களுக்கு இதே வேலையா போச்சு! வங்கதேசத்துக்கு கட்டம் சரியில்லை போல!

இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதில், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் 9வது லீக் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கயிருக்கும் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணி, இந்திய அணியுடன் மோதுகிறது.

இப்போட்டியில் வங்கதேச அணி எப்படியும் வெற்றி வாகை சூடும் என்ற நம்பிக்கையில், வங்கதேச ரசிகர்கள் இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

இதில், வங்கதேச கொடியுடன் புலி பாய்வது போன்றும், இந்திய தேசியக் கொடியுடன் நாய் தாவுவது போன்றும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம், தாகா மற்றும் மிர்புர் ஆகிய இடங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் 2வது அரையிறுதிப் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வங்கதேச அணி தோனி மற்றும் கோலியை வித்தியாசமாக சித்தரித்து வெளியிட்டிருந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.