Sep 30

மாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச் சொல்லும் செய்தி என்ன? - யதீந்திரா


மாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மாலைதீவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இதன் உச்சமாக இந்தியாவினால் வழங்கப்பட்ட இரண்டு உலங்கு வானூர்திகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மாலைதீவு நிர்வாகம் பணித்திருந்தது. மாலைதீவில் தங்கியிருந்த இந்தியாவின் 26 விமானப்படை அதிகாரிகளுக்கான கடவுச் சீட்டை இரத்துச் செய்தது. அத்துடன் மாலைதீவில் பணியாற்றிக் கொண்டிருந்த 2000 இந்திய பணியாளர்களுக்கான வேலை அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்தது. வழமையாக இந்தியர்களால் விண்ணப்பிக்கப்பட்டு, பெறப்படும் மாலைதீவின் விளம்பர நிறுவனங்களுக்கு இந்தியர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று அறிவித்தது. மாலைதீவின் தலைநகருக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படவிருந்த சர்வதேச விமான நிலையத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படவிருந்த நிலையில், அதனை ரத்துச் செய்தது சீனாவிற்கு வழங்கியது. பாக்கிஸ்தான் கடற்படைத் தளபதி மாலைதீவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், மாலைதீவின் விசேட வர்த்தக வலயத்தை பாக்கிஸ்தான் கடற்படையுடன் இணைந்து பாதுகாக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்தது. இவை அனைத்தும் மாலைதீவின் ஆட்சியாளர்கள் நீண்டகாலமாக கடைப்பிடித்துவந்த முதலில் இந்தியா (India First) என்னும் வெளிவிவகாரக் கொள்கை நிலைப்பாட்டிலிருந்து மாலைதீவு விலகிச் சென்று கொண்டிருந்தமையின் விளைவுகள்.

இதற்கு என்ன காரணம்? 2013இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஆட்சியிலிருந்த மாலைதீவு ஜனநாயக கட்சியின் தலைவர் நசீட்டை, மாலைதீவு முற்போக்கு கட்சியின் தலைவர் அப்துல் ஜமீன் தோற்கடித்தார். ஜமீன் இந்தியாவை புறக்கணித்து, முற்றிலும் சீனாவின் பிடிக்குள் மாலைதீவின் எதிர்காலத்தை கொண்டு செல்ல முற்பட்டார். இதிலுள்ள ஒரு சுவார்சியமான விடயமும் உண்டு. ஜமீன், மாலை தீவை முப்பது வருடங்களாக ஆட்சி செய்த, மம்மூன் ஹயூமின் அரை சகோதரராவார். 2011இல் மாலைதீவு முற்போக்கு கட்சியை ஹயூமும் ஜமீனும் இணைந்தே உருவாக்கினர். எனினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் காரணமாக 2016இல் ஹயூமின் அணி கட்சியிலிருந்து வெளியேறியது. ஹயூம், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார் என்னும் குற்றச்சாட்டின் கீழ் 2018இல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதியான முகமட்நசீட் உட்பட பல அரசியல் தலைவர்களை சிறையிலடைக்கப்பட்டனர். 15 நாள் அவசகால நிலையை பிரகடணம் செய்து, மாலைதீவின் உச்ச நீதிமன்ற நீதிபதியையும் சிறையிலடைத்தார். இது மாலைதீவின் மீது மேற்குலகின் அழுத்தங்களை தீவிரப்படுத்தியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஜமீனை, பொது எதிரணி வேட்பாளர் இப்ராகீம் சொலி தோற்கடித்திருக்கிறார். இது பற்றி எழுதியிருக்கும் பல இந்திய ஆய்வாளர்களும், இந்தியாவை பின்தள்ளும் மூலோபாய விளையாட்டில், ஜமீன் தோற்கடிப்பட்டிருப்பதாக ( Yameen’s loss puts India back in the strategic game in Maldives) எழுதியிருக்கின்றனர்.

சில ஊடகங்கள், இந்த சந்தர்பத்தத்தை முன்னிறுத்திசுமார் 28 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருக்கின்றன. அதனை இப்போது பல தமிழ் அரசியல் அவதானிகளும், ஏன் அரசியல் வாதிகளும் கூட மறந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு தனிநாடு ஒன்றே தீர்வு என்று பேராடப்புறப்பட்ட, ஆயுத விடுதலை இயங்களில் ஒன்றான புளொட் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களால் அதனை மறக்க முடியாது.

1988 ஆம் ஆண்டு, மாலைதீவு தொழி அதிபரான அப்துல்லா லுதுபி என்பவரின் தலைமையில், 80 பேர் கொண்ட புளொட் உறுப்பினர்களின் அணியினர் மாலைதீவு அரசை கவிழக்கும் சதிப்புரட்சியொன்றில் ஈடுபட்டனர். இந்த சதிப்புரட்சியை இந்தியாவே தோற்கடித்தது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு இந்திய இராணுவம் ஒப்பிரேசன் கள்ளிச்செடி (ழுpநசயவழைn உயஉவரள) என்று பெயரிட்டிருந்தது. இதற்கு ஒப்பிரேசன் கள்ளிச்செடி என்று பெயரிட்டதற்கும் ஒரு காரணமும் உண்டு. அதாவது, இந்தியாவிற்கு அருகில் இருக்கும் மாலைதீவில் கைவைப்பது கள்ளிச்செடியில் கைவைப்பதற்கு ஒப்பானது என்பதை சுட்டிக் காட்டும் நோக்கிலேயே இந்தப் பெயர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. கள்ளிச் செடியில் கைவைத்தால், அது உங்களை குத்தி, உங்கள் இரத்தம் பார்க்கும். இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டியிருக்கும் சில ஆங்கில ஊடகங்கள், 28 வருடங்கள் கழித்து, மீண்டும் இந்தியா மாலைதீவில் தனது கட்டுப்பாட்டை நிறுவும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக பதிவிட்டிருக்கின்றன. ஆனால் அந்த நடவடிக்கையும் தேர்தல் மூலமான மாற்றமும் ஒன்றல்ல. ஆனால் ஒப்பிரேசன் கள்ளிச்செடிக்கு பின்னர், ஹயூம், முப்பது வருடங்கள் இந்தியாவிற்கு நெருக்கமான ஆட்சியை நடத்தியிருந்தார்.

இங்கு மாலைதீவு அல்ல விடயம். மாலைதீவின் தேர்தல் முடிவுகள் இலங்கைக்கு செல்லும் அல்ல சொல்லக் கூடிய செய்தி என்ன என்பதுதான் நமக்கு முக்கியமானது. தற்போது மாலைதீவில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்களையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கும், இலங்கைத் தீவில் 2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பண்புகளுக்கும் இடையில் சில ஒத்த தன்மைகள் இருக்கின்றன. மகிந்த ராஜபக்ச தலைமையிலான கொழும்பு, சீனாவுடன் அதிகம் நெருங்கிச் சென்று கொண்டிருந்த நிலையில்தான், இங்கும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டமை இந்திய தேசிய பாதுகாப்பை உரசும் ஒரு செயற்பாடாகவே இருந்தது. இவ்வாறனதொரு பின்புலத்தில் ஆட்சியை இழந்து போன மகிந்த ராஜபக்ச தனது தோல்விக்கான காரணமாக முதலிலில் இந்திய உளவுத்துறைiயே குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் சில நாட்களில் அமெரிக்க, பிரித்தானிய உளவுத்துறைகளையும் இணைத்துக் கொண்டார். இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்புலத்திலேயே இந்திய பிரதமர் மோடி, இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். ஆனால் 2014இல் அதிகாரத்திற்கு வந்த மோடி இதுவரை மாலைதீவிற்கு விஜயம் செய்யவில்லை காரணம் ஜமீனின் ஆட்சி இந்தியாவிற்கு எதிராக இருந்தது. ஒரு வேளை, மாலைதீவின் சீன சார்பு ஆடசியாளர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து எதனையும் கற்றுக் கொள்ளவில்லை போலும்.

இலங்கை தொடர்பில் இந்தியாவின் அவதானங்கள் என்னவென்பதை எவரும் அறிய முடியாது. ஆனால் ஆழத்தில் ஒரு அவதானம் நிச்சயம் இருக்கவே செய்யும். அண்மையில் மகிந்தவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்றை வைத்து, மகிந்தவின் தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்புகிறது என்றும் கூற முடியாது. அப்படியில்லை என்றும் கூற முடியாது. பலம்பொருந்திய சக்திகளின் மூலோபாய நலன்களுக்கான விளையாட்டில் எதுவும் நிகழலாம். ஆனால் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் சீனாவின் செல்வாக்கை எதிர்பார்த்தது போல் தடுத்து நிறுத்த முடிந்ததா என்னும் கேள்வியொன்றும் இருக்கிறது. 1988இல் இடம்பெற்ற சதிப்புரட்சியை தடுத்து நிறுத்தும் இராணுவ நடவடிக்கையின் போது, அப்போது இந்தியாவின் பிரதமரா இருந்த ராஜீவ்காந்தி இப்படிக் கூறினாராம். ஹயூம் இந்த பிராந்தியத்தில் எங்களுடைய ஆள் - அவரை நாங்கள் இழந்துவிடக் கூடாது.  (Gayoom is India’s man in the Indian Ocean. We can’t afford to lose him) ஆனால் இலங்கையிலுள்ள சிங்கள தலைவர் ஒருவரைப் பார்த்து இந்தியாவினால் இவ்வாறு கூற முடியுமா? அப்படியான ஒரு சிங்கள தலைவர் இருக்கிறாரா? இப்படியொரு பின்புலத்தில் எவரை வைத்துக் கொள்வது என்பதை விடவும் எவ்வாறானதொரு ஆட்சி இருந்தால் நிலைமைகளை கையாள்வதற்கு இலகுவாக அமையும் என்பதில்தான் இந்தியா கவனம் செலுத்த வாய்ப்புண்டு போல் தெரிகிறது. இதில் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது? 2015இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தற்போது மாலைதீவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் ஆகியவை ஒரு செய்தியை தெளிவாகச் சொல்லுகின்றன. இந்து சமூத்திர பிராந்தியத்தில், சீனா எதிர் இந்தியா அமெரிக்கக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் ஒரு வெளித்தெரியாத பனிப் போர் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அது தொடரத்தான் போகிறது. அதாவது இந்த விளையாட்டு தொடரும். 2020 இன் தேர்தல் நெருங்க நெருங்க இந்த விளையாட்டின் போக்கை உணரலாம். தமிழ் அரசியல் சூழலைப் பொறுத்தவரையில், இந்த விளையாட்டு தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனெனில் இதனை விளையாடும் ஆளுமையோடு எவரும் இல்லை மேலும் அதற்கான தயாரிப்புக்களும் இல்லை. நடக்கப்பிலனில்லாதவர்களை வைத்துக் கொண்டு எப்படி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடுவது