Jun 13

வெப்பநிலையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ரொறன்ரோ நிர்வாகம் வலியுறுத்தல்

ரொறன்ரோவில் அதிகரித்து காணப்படும் வெப்பநிலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ரொறன்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதன்படி ரொறன்ரோ மற்றும் ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கான தீவிர வெப்ப எச்சரிக்கையை கடந்த சனிக்கிழமை கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நேற்றுப் பிற்பகலில் அதி கூடிய வெப்பநிலையாக 31 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ள நிலையில், இவ் வெப்பநிலையில் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என கூறப்படுகின்றது.

பகல் வேளைகளில் 30 பாகைக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகும் நிலையில், இரவு வேளைகளிலும் வெப்பநிலையின் அளவு 20 பாகைக்கும் அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை அவதானிப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான அதிக வெப்பநிலை நிலவும் காலத்தில் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அதிகமான பாதிப்பினை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரொறன்ரோ சுகாதாரத் துறையின் தலைமை அதிகாரி அந்நகர மக்களுக்கான வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதுடன், நகர் முழுவதும் குளிரூட்டல் நிலையங்களை திறந்து வைப்பதற்கான அறிவுத்தல்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இக்காலத்தில் அனைவரும் போதியளவு நீர்ப் பதார்த்தங்களை அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இவ் வெப்ப காலத்தில் உதவி தேவைப்படுவோர் 311 என்ற இலக்கத்துக்கு அழைத்து உதவி கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.