Jun 13

வறுமையில் தவிக்கும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு உதவும் கனடா

மோசமான வரட்சி அதன் விளைவாக ஏற்பட்டுள்ள வறுமை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு கனடா உதவிகளை வழங்கவுள்ளது.

கனேடிய மத்திய அரசாங்கத்தின் சார்பில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் அஹ்மட் ஹூசெய்ன், சர்வதேச அபிவிருத்தி நிவாரண நிதியம், கனேடிய சோமாலிய காங்கிரஸ், குளோபல் மெடிக் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாக இந்த உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கனேடியர்களின் பெருந்தன்மை மற்றும் கனேடியர்களது இயலுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக, சோமாலியாவில் பிறந்தவரான குடிவரவு அமைச்சர் அஹ்மட் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.

மக்களின் இந்த உதவிகளுக்கு மேலதிகமாக குறித்த இந்த பாதிக்கப்பட்ட நாடுகளுக்காக கனேடிய மத்திய அரசாங்கமும் 119 மில்லியன் டொலர்களை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலை தொடர்பில் விபரம் வெளியிட்டுள்ள குளோபல் மெடிக் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆபிரிக்காவின் கிழக்கு பிராந்தியங்களில் வறட்சி நிலவுவதையும், இதனால் பயிர்ச் செய்கைகளும், கால்நடைப் பண்ணைகளும் அழிவடைந்து போயுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோமாலியா, கென்யா, தென் சூடான், எதியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் மக்கள் இந்த வறட்சியின் விளைவாக வறுமையையும் பட்டினியையும் எதிர்கொண்டுள்ளதையும், இதனால் அங்குள்ள ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் எட்டு இலட்சம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதையும் அவா எடுததுக்காட்டியுள்ளார்.

அத்துடன் துப்பபுரவான குடிநீர் இன்மையால், நாடு தழுவிய அளவில் நீரினால் பரவும் நோய்கள் தீவிரமாக பரவி வருவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் கனடா ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.