Mar 17

இரட்டை இலை சின்னம்; 21ஆம் திகதிவரை கால அவகாசம்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக பதில் அளிப்பதற்கு சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டதையடுத்து 21ஆம் திகதி பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேபோல் சசிகலா ஆதரவு அணியினரும் தலைமை தேர்தல் ஆணையரை நேற்று சந்தித்து முறைப்பாடு செய்தனர்.குறிப்பாக சசிகலா நியமன விவகாரத்தில் அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன என்றும் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதால் பன்னீர்செல்வம் அணியினர் வைத்த கோரிக்கைகளை தற்போது பரிசீலனையில் எடுத்துக்கொள்ள கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர்.

சசிகலா தரப்பில் 21ஆம் திகதி  பதில் அளித்ததும், மறுநாள் 22ஆம் திகதி இருதரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதற்காக 22ஆம் திகதி காலை 10.30 மணிக்கு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்குப்பின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும்.

இதற்கிடையே சென்னையில் இன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரனை வெற்றி பெறச்செய்வோம் என்று கூறினார்.