Sep 26

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்குச் சென்றனர். 

இவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். 

மேலும் படகுகளில் இருந்த வலைகளை அறுத்தெறிந்தும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இறுதியாக அவர்களிடம் இருந்து தப்பித்த மீனவர்கள் ஒருவழியாக கரை வந்து சேர்ந்தனர்.இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், டீசல் விலை உயர்வால் மீன்பிடித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்கி டீசல் போட்டுக் கொண்டு கடலுக்குச் சென்றாலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நீடித்து வருகிறது. இலங்கை கடற்படையினரால் ஒவ்வொரு விசைப் படகுக்கும் இருபதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர். 

ஏற்கெனவே கடந்த செப், 14 மற்றும் 16ஆம் தேதிகளில் இதேபோன்று நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அவர்களை தாக்கியதுடன், மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்தனர். தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.