Sep 25

நாட்டில் கடும் மழை: 200இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 200இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.


குறிப்பாக பலத்த காற்று காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 80 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, அவற்றில் 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவிய கடும் வெப்பநிலையைத் தொடர்ந்து, கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக தலைநகர் கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை போன்ற மாவட்டங்கள் அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளன.

தலைநகர் கொழும்பில் நேற்று 114 மில்லிலீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிலீற்றருக்கும் அதிகமான மழைபெய்யலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என்றும், இடிமின்னல் தாக்கம் ஏற்படுமென்றும் அறிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியா, பொலனறுவை ஆகிய பிரதேசங்களில் அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.