Sep 24

நஃப்டா குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ட்ரூடோ தெரிவிப்பு

நஃப்டா எனப்படும் வடக்கு அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கனடா தொடர்ந்தும் நீடிக்கும் வகையில், இவ்வாரம் அமெரிக்காவுடன் அதிகாரபூர்வமமற்ற பேச்சுவார்த்தை நடத்தப்படுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் பக்க அமர்வாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

நஃப்டா ஒப்பந்தம் குறித்த தீர்மானத்தை எட்டுவதற்கு செப்டெம்பர் மாதம் வரை அமெரிக்கா காலக்கெடு விதித்திருந்தது. எனினும், இதுவரை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நஃப்டா உடன்படிக்கையில் மெக்சிகோவை சேர்த்துக்கொண்ட அமெரிக்கா, தேவை ஏற்பட்டால் கனடாவை விலக்குவதாக அறிவித்திருந்தது. மேலும், கனடாவின் வாகன உதிரிப்பாகங்களுக்கு 25 வீதம் வரிவிதிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்திருந்தது. அவ்வாறு நிகழுமாயின் கனடாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

எவ்வாறெனினும், தமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லையென கனடா கூறியுள்ளது.

இதேவேளை, கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட், சிறந்த ஒப்பந்தமொன்றை எட்டுவதற்காக கடந்த ஒரு மாத காலத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.