Sep 24

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை அதிரடியாக மீட்ட தீயணைப்பு துறை.!

Image

நாகை மாவட்டம், புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை தீயணைப்பு படை வீரர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். புதுப்பள்ளியை சேர்ந்த கார்த்தி என்பவரது மகள் திவ்யதர்ஷினி. அன்புச்செல்வன் என்பவர் வசித்து வரும் பக்கத்து வீட்டில் ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டது. 15 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டிய பணியாளர்கள், மதியம் சாப்பிட சென்றபோது, கிணற்றின் மீது பலகையை வைத்து மூடி சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த திவ்யதர்ஷினி எதிர்ப்பாராத விதமாக கிணற்றில் விழுந்தார்.

இதைத் தொடர்ந்து தீயணைப்புப்படை வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், முதலில் கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தினர். அதன்பின், பொக்லைன் எந்திரம் மூலம் அருகே பள்ளம் தோண்டி, 15 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.