Sep 24

சீரற்ற காலநிலை: ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக ரொறன்ரோ பெரும்பாகத்தின் பல்வேறு இடங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் மின் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்நிலையை சரிசெய்ய ரொறன்ரோ ஹைட்ரோ பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பெரும்பாகத்தை புரட்டிப் போட்ட பலத்த சூறைக் காற்று காரணமாக ஏறக்குறைய 20,000 குடியிருப்பாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக Annex, Leaside, Yorkville மற்றும் Etobicoke பகுதிகளில் மாத்திரம் 5,000ற்கும் அதிகமானோருக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ரொறன்ரோ ஹைட்ரோ தெரிவித்தது.

இதேவேளை ரொறன்ரோ பெரும்பாகத்தின் ஏனைய பல பகுதிகளில் தமது 8,000ற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின் விநியோகத் தடையை எதிர்கொண்டதாக Alectra Utilities தெரிவித்தது.

அதேபோல பிக்கறிங் பகுதியில் கிட்டத்தட்ட 5,800 குடியிருப்பாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதனை Veridian Connections நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் ஒட்டாவா பிரதேசத்திலும் மின் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் மற்றும் இரவு வேளையில் ரொறன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும் என கனேடிய சுற்றுச் சூழல் அமைப்பு எச்சரிக்கை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.