Mar 17

மலேசிய மனித உரிமையாளருக்காக கொழும்பில் போராட்டம்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படத்தினை வெளியிட்டிருந்த செல்வி லீனா கென்றியை குற்றங்களில் இருந்து மலேசியா விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.

மலேசியத் தூதுவராலயத்தின் கொழும்பு அலுவலகம் முன்பாக இன்று (17.03.2017) மாலை 4 மணியளவில் மனித உரிமை அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட  எதிர்ப்பு நடவடிக்கையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூகந் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இலங்கை மனித உரிமைகள் மீறல் நிலை தொடர்பான நோ பயர் சோன் என்ற திரைப்படத்தினை வெளியிட்டமைக்காக புஷாட் கொமாஸ் அமைப்பின் பணிக்குழு உறுப்பினரான செல்வி லீனா கென்றி அந்நாட்டின் தணிக்கைச் சட்டங்களுக்குப் புறம்பாகச் 2013 இல் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் கடந்த மாதம் 21 ஆம் திகதி கோலாலம்பூர் நீதவான் நீதிமன்றம் குற்றத்தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந் நிலையில் மனித உரிமைகள் சார்ந்த திரைப்படத்தினை காட்சிப்படுத்தல் தொடர்பாக தண்டணை வழங்குவது கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை மீறுவதாகும் அவ்வாறான ஓர் திரைப்படத்தினை காட்சிப்படுத்துவதற்கு அனுமதி பெறப்படவேண்டும் என்பதும் முன் தணிக்கைக்கு சமனான நடவடிக்கையாகும் இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் சமூகத்திற்கும் பொதுவாக தகவல்களை பெறுவதற்கும் தேடலுக்கம் உள்ள உரிமை தடைசெய்யப்படுகின்றது. 

எனவே மனித உரிமைச் செயற்பாட்டாளர் லீனா கென்றி தாமதமின்றி குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அவரது உரிமைப்பயணத்தினை முன்னெடுப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களால் கருத்துரைக்கப்பட்டது.

 ஆர்ப்பாட்டத்தில் இன்போம் மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் றுக்கி பெர்ணாண்டோ சமூக விஞ்ஞான ஆய்வாளர் பாலசிங்கம் ஸ்கந்தகுமார் மனித உரிமைகள் சட்டத்தரணி இரட்ணவேல் வடக்கு மனித உரிமைகள் நிலையத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் தியாகராஜா நிரோஷ் அரசியல் கட்சிகளின் தலைவர்களான விக்கிரமபாகு கருணாரட்ண சிறிதுங்க ஜெயசூரிய உட்பட அதிகளவானோர் பங்கெடுத்தனர்.

இவ் எதிர்ப்பு நடவடிக்கையின்போது லினா கென்றி குற்றத்தீர்ப்புக்களில் இருந்து விடுவிக்கப்படவேண்டும் என வலியுறுத்தி இலங்கையின் பலபாகங்களையும் மூவினங்களையும் சேர்ந்த 88 செயற்பாட்டாளர்களும் 06 மனித உரிமை அமைப்புக்களும் கையொப்பமிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.