Sep 21

விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியவர் ஜெயலலிதா

விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தியவர் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு அளித்த உதவிகள் குறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியதை வைத்து அதிமுக பொதுக் கூட்டம் நடத்துவதாக கூறுகிறது.

மஹிந்த ராஜபக்ச பொதுவாக கூறியதை மூடி மறைத்து இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ உதவி செய்ததாக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஆகும்.

கடந்த காலத்தில் இதே குற்றச்சாட்டு கூறியபோது அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரனாப் முகர்ஜி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதில் கூறும் போது இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்தவிதமான இராணுவ உதவியும் செய்யவில்லை.

ஆயுதங்கள், இராணுவ தளவாடங்கள் வழங்கியதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. இந்திய அரசு மீது அவதூறு கற்பிக்கிற முயற்சியாகும் என்று தெளிவுபடுத்தினார். இதற்குப் பிறகும் துருபிடித்த வாதத்தை அதிமுக முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாடு இன்னொரு நாட்டிற்கு இராணுவ உதவி செய்தது என்று கூறுபவர்கள் அதற்கான ஆதாரத்தை கடுகளவு கூட முன்வைத்ததில்லை. யாருக்கும் தெரியாமல், எவர் கண்ணிலும் படாமல் ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு இராணுவ தளவாட உதவிகளை செய்ய முடியுமா? இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் இது சாத்தியமா?

தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய அவதூறு சேற்றை அன்றைய காங்கிரஸ், திமுக பங்கேற்ற மத்திய அரசின் மீது அள்ளி வீசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இந்த கருத்தை ஏற்கெனவே 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முறியடித்து 28 இடங்களில் காங்கிரஸ் – திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்தார்கள் என்பதை அதிமுகவினருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க, இனக் கொடுமைகளுக்கு முடிவு காண இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்தவர் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தமிழ்த் தாயகம் உருவாக்கப்பட்டது. 1956 முதல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நியாயமற்ற நிலை மாறி, தமிழும் ஆட்சி மொழி என்ற சமஉரிமை பெற்றது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் 13 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

இன்றைக்கும் தமிழர்கள் பிரச்சினை தீர்வு காண்பதற்கு பாதுகாப்பு கவசமாக இருப்பது 13 ஆவது திருத்தம் தான். இத்தகைய உரிமைகளை பெற்றுத் தந்த ராஜீவ்காந்தி அவர்கள் பயங்கரவாதிகளின் வன்முறைக்கு பலியாக்கப்பட்டதையும் இங்கு வருத்தத்தோடு கூற விரும்புகிறேன்.

இலங்கையில் 2009 இல் நடைபெற்ற போருக்குப் பிறகு தமிழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி அரசு பல்வேறு மறுவாழ்வு நலத் திட்ட உதவிகளை ரூபாய் 4 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தியது.

இலங்கை தமிழர்களுக்கு துரும்பைக் கூட எடுத்துப் போடாத அதிமுக இன்றைக்கு நீலிக் கண்ணீர் வடிப்பது மிகுந்த நகைப்பிற்குரியது.

இலங்கையில் யத்தம் நடந்துக் கொண்டிருந்த சூழலில் அதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, யுத்தம் என்றுச் சொன்னால் அதிலே அப்பாவிகள் கொல்லப்படுவதும், பாதிக்கப்படுவதும் இயல்பானது தான் என கூறியதை இன்றைய அதிமுகவினரால் மறுக்க முடியுமா?

அதேபோல, விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியவர் ஜெயலலிதா.

ஆனால் அதே ஜெயலலிதா 2009-க்கு பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டு தமிழ் ஈழத்தை பெற்றுத் தர இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டுமென்று கூறியதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இலங்கை தமிழர்கள் பிரச்சினையைப் பொறுத்தவரை எந்த கொள்கையும் இல்லாத அதிமுக எத்தகைய இரட்டை வேடத்தை போட்டு மக்களை ஏமாற்றி வந்தது என்பதை உணர்த்தவே இதனை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.