Jun 12

உலக மக்களை ஆச்சரியத்தில் திகைக்க வைத்த சிறுவனின் சாதுரியம்!!

வல்லுநர்களை சந்தித்து உணர்ச்சிபூர்வமான ஆலோசனைகளைப் பெற நேரமோ, பணமோ இல்லாதவர்கள், 11 வயது சிறுவனிடம் ஆலோசனைகளைக் கேட்கிறார்கள்! நியூயார்க் சப்வே ஸ்டே‌ஷனில் அமர்ந்து, ஆலோசனைகளை அளித்து வருகிறான் சிரோ ஆர்டிஸ். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 2 மணி நேரம் ஆலோசனைகளை வழங்குவதற்காகச் செலவிடுகிறான்.

ஒவ்வொருவருக்கும் 5 நிமிடங்கள், 136 ரூபாய் கட்டணம். சிறுவனிடம் ஆலோசனை கேட்கப் பெரியவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஆச்சரியமான வி‌ஷயம். பெயர், குடும்பம், வேலை போன்ற வி‌ஷயங்களைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு எந்தவிதமான ஆலோசனை வேண்டும் என்று கேட்கிறான். வீட்டிலோ, வேலையிலோ, உறவுகளிலோ ஆலோசனை வேண்டும் என்று சொன்னால், அதற்கேற்றவாறு எளிய ஆலோசனைகளை வழங்கி விடுகிறான். அவர்களும் திருப்தியாகக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு செல்கிறார்கள்.

‘‘ஒருநாள் இரவு சில பிரச்சினைகளை விவரித்து, அதற்கு ஆலோசனைகளையும் சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனுடைய திறமையை ஊக்குவிக்க முடிவு செய்தேன். மறுநாள் வில்லியம்ஸ்பர்க் தெருவுக்குச் சென்றோம்.ஆலோசனைக்கு 2 டாலர் கட்டணம் என்று எழுதி வைத்துக் காத்திருந்தோம். நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் வந்து, ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்’’ என்கிறார் சிரோவின் அப்பா ஆடம்.

‘‘என்னுடைய ஆலோசனைகள் மிக எளிமையானவை. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வி‌ஷயமும் மாற்றத்தைச் சந்தித்துக்  கொண்டிருக்கிறது. நாமும் மாறித்தான் ஆக வேண்டும் என்பதைத்தான் என் ஆலோசனைகளில் அதிகம் சொல்கிறேன்’’ என்கிறான் சிரோ.