Sep 20

பொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் அவரது பதவிக்கு பொறுத்தமற்றவை: அநுர

பொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்றவகையில் அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நாடாளுமன்ற அமர்வில், தினப்பணிகளின் நிறைவில் ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பாக சட்டம் ஒழுங்கின் நிலைப்பாட்டையும் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர், ”பொலிஸ்மா அதிபரை அரசியலமைப்பு பேரவையே நியமிக்கும். பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கும், நீக்குவதற்கும் சில நெறிமுறைகள் காணப்படுகின்றன.

ஆனால், அவருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.

பொலிஸ் திணைக்களத்திற்குள்ளேயே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் அண்மைய காலமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.