Sep 20

சாதியால் வீழ்த்தப்படும் காதல்கள் ; ஆணவக்கொலைகளின் களமாகிறதா தேசம்.!

காதல் என்ற ஒற்றை உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்த உலகில் உயிர்கள் உயிர்த்திருப்பது நிச்சயம் சாத்தியம் இல்லை என்றான் மேலைநாட்டு கவிஞன் ஒருவன். ஆம், எத்துணை தீர்க்கமான வரிகள் இவை. தாய்க்கும் - சேய்க்குமான உறவு தொடங்கி எல்லா வகையிலான உறவுகளிலும் நீங்காது நிலை பெற்றிருக்கிறது காதலெனும் பெரு உணர்வு.


ஆனால், அத்தகைய காதலுக்கும் இங்கே சாதியின் பெயராலும் - மதத்தாலும் எண்ணற்ற தடைகள் உண்டாக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்த மட்டத்தில் உடுமலைப்பேட்டை சங்கர், தருமபுரி இளவரசன், பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் என எண்ணற்ற உயிர்கள் மாற்று சாதியை சேர்ந்த பெண்களை காதலித்தார்கள், திருமணம் செய்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக அப்பட்டமாக கொல்லப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாருதி ராவ். இவரது மகள் அம்ருதா மாற்று ஜாதி இளைஞரான பிரணாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்ற காரணத்திற்காக பிரணாய் அப்பட்டமாக பொதுவீதியில் வைத்து வெட்டிசாய்க்கப்பட்டார்.

அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போர் உள்ளங்களை கலங்கச் செய்தன. இரு மனங்களுக்கிடையே துளிர்த்து அரும்பும் காதலை சாதி - மத தீயால் சுட்டுப்பொசுக்குவது எந்த வகையில் சரியாகும்? இத்தகைய சம்பவங்களை மட்டுப்படுத்த ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனி சட்டமும், அத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்பதுவே பொது மக்களின் கோரிக்கை. கவனத்தில் கொள்ளுமா அரசுகள்