Sep 20

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு?

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் விடயம் பூதாகரமாக வெடித்துள்ளது.பொலிஸ் திணைக்களத்திற்குள்ளேயே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் அண்மைய காலமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதன் பின்னணியில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சதித்திட்டத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதானியாக செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்ப நேற்று பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்தது.

இந்நிலையில், பொலிஸ்மா அதிபரையும் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த சதித்திட்டம் தொடர்பில் ஊழல் எதிர்ப்பு படையணியின் பிரதானி வெளியிட்ட குரல் பதிவை நிரூபிக்குமாறு அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.