Sep 20

ராணுவ தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு; பாதுகாப்பு படை வீரர் கைது

மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர், அச்சுதானந்த் மிஸ்ரா. உ.பி., மாநிலம், நொய்டாவில் உள்ள, பி.எஸ்.எப்., படைப்பிரிவில் பணியாற்றும் இவருக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.

பாக்., பெண்ணுடன் ஏற்பட்ட அதீத நட்பு காரணமாக, தன் பணியிடம், அங்கு நடக்கும் கூட்டங்கள் பற்றிய விபரங்களை, அவருடன் பகிர்ந்தார். வீரர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வந்த, உ.பி., மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், மிஸ்ராவின், வாட்ஸ் ஆப், பேஸ்புக் தகவல் பரிமாற்றங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை கைது செய்தனர். 

முதற்கட்ட விசாரணையில், மிஸ்ராவுடன் தொடர்பில் இருந்த பெண், பாகிஸ்தானைச் சேர்ந்த, உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., ஏஜன்ட் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.