Sep 19

ரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு சிரியாவே காரணம்: இஸ்ரேல் குற்றச்சாட்டு!

ரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு சிரியா படையினரின் தாக்குதலே காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்த ரஷ்ய விமான ஊழியர்கள் 15 பேரின் உயிரிழப்பு கவலையளிப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை குறித்த விமானம், வட மேற்கு நகரமான லடாக்கியாவிற்கு அருகில் உள்ள ரஷ்யாவின் ஹிமேமீம் விமானத்தளத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கையில், சிரியா கடற்கரையிலிருந்து சுமார் 35 கிமீ (22 மைல்) தொலைவில் குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை கடந்த திங்களன்று லடாக்கியா பகுதியில் சில இடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த விபரங்களை அறிவிக்கப்போவதில்லை என இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவம் தற்போது சிரிய இராணுவத்தின்மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில் தமது விமானம் தற்செயலாக சிரியாவால் சுடப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.