Sep 14

மனைவியைத் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நபர் கைது

கிராந்துருகோட்டே பிரதேசத்தில் மனைவியொருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சந்தேகநபரொருவரை நேற்று  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

பல நாட்களாக தொடர்ந்துள்ள குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13 ஆம் திகதி மாலை வாய்த்தர்க்கம் கைகலப்பாகமாறி தனது இளம் மனைவி மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். 

இச்சம்பவத்தில் காயமடைந்த மனைவி ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன் சந்தேகநபரும் தற்கொலைச் செய்துகொள்ள முயற்சித்துள்ளார். 

பிரதேசவாசிகளினால் சம்பவம் தொடர்பில் அவசரமாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மரணித்த பெண்ணின் சடலமானது மீட்கப்பட்டு மரண மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக கிராந்துருகோட்டே ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கிராந்துருகோட்டே அகலஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய திசாநாயக்க முதியன்சலாகே நிலுஷா சுஹாஷினி சம்பிக்கா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். 

இச்சம்பவத்தின் போது தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த கணவரும் காப்பாற்றப்பட்டு தற்போது மஹியங்கனை வைத்தியசாலையில் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். 

அவரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள கிராந்துருகோட்டே பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.