Jun 11

“என் குரலில் பேசினால் அவ்வளவுதான்” : கடுப்பான பாடகி ஜானகி!

ரேடியோவில் தன் குரலில் பேசிய நபரால் பாடகி ஜானகி மிகுந்த கோபத்திலும், மன உளைச்சலிலும் இருப்பதாக கூறியுள்ளார்.

ஜுன் 2ஆம் தேதி இசைஞானி இளையராஜா பிறந்தநாள் அன்று பிரபல ரேடியோ பண்பலையில் பிரலங்கள் அவர் குறித்து பேசும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் பாடகி ஜானகி குரலில் இளையராஜா குறித்து பேசியும், பாடுவது போலவும் ஒளிபரப்பப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ஆனால் அப்படி ஒரு நிகழ்ச்சியில் தான் பேசவே இல்லை என்று ஜானகி கூறியிருக்கிறார்.இது குறித்து விகடனுக்கு பேட்டி அளித்த ஜானகி, தனியார் பண்பலையில் பேசிய ஆடியோவை எனக்கு ரசிகர்கள் எனக்கு அனுப்பினார்கள். அதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து அந்த ரேடியா பண்பலைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, தொடக்கத்தில் உங்கள் குரல் போல் இருந்ததால் தொலைபேசி இணைப்பை கொடுத்தோம்.

பேசும் போது தான் தெரிந்தது உங்கள் குரல் இல்லை என்று. நேரலை என்பதால் இணைப்பை துண்டிக்க முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது அது ஒரு ஆண் என்பது தெரியவந்தது. மேலும் அவரை எச்சரித்ததாகவும், அவர் செயலுக்கு மன்னிப்பு கேட்டதாகவும் பண்பலையில் கூறினர் என்று ஜானகி கூறினார்.

ஆனால் ஒருவர் குரலில் இப்படி பேசுவது மிகப்பெரும் மோசடி. ஒரு ஆண் பெண் குரலில் பேசுவது கீழ்த்தரமான வேலை. இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தவறு செய்து நபர் குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் என்று இருந்தேன், ஆனால் அவர் தெரியாமல் செய்திருக்கலாம் என்பதால் மன்னித்து விட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் இதுவே கடைசியாக இருக்கட்டும். இனி இதுபோன்ற செயல்களில் என் ரசிகர்கள் ஈடுபட்டால் காவல்துறையில் புகார் அளித்து கடுமையாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஜானகி எச்சரித்துள்ளார்.