Sep 12

ரஷ்யாவில் மாபெரும் பொருளாதார – பாரம்பரியக் கண்காட்சி!

ரஷ்யாவின் கலாசார, பாரம்பரிய கைத்தொழில், நடனங்கள், அபிவிருத்திகளை வெளிப்படுத்தும் வகையிலான கண்காட்சியொன்று  விளடிவெஸ்டொக் நகரில் இடம்பெற்று வருகின்றது.

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் பொருளாதார மாநாட்டிற்கு செல்லும் வழியில், சுமார் 1300 மீற்றர் தூரம் வரை ‘Far East Street’ என்ற பெயரில் இந்த கண்காட்சி இடம்பெற்றுவருகின்றது. நேற்று ஆரம்பமாகிய குறித்த கண்காட்சி இன்று (புதன்கிழமை) நிறைவடையவுள்ளது.

கிழக்குப் பொருளாதார மாநாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கவர்வதற்காகவும் தங்கள் கைத்தொழில் மற்றும் அபிவிருத்திகளைக் காட்சிப்படுத்தி வெளிநாட்டு முதலீடுகளையும் உள்நாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்வதற்காகவும் குறித்த Far East Street கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய பாரம்பரிய, கலாசாரத்தின் பின்னணியில் சீனா இருப்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் குறித்த கண்காட்சி நிகழ்வில் சீனாவின் ஹெய்டி நகரத்திலிருந்து நடனக் குழுக்கள் வருகை தந்து தங்கள் பாரம்பரிய நடனத்தினை அரங்கேற்றி விருந்தினர்களைப் பரவசப்படுத்துவதோடு சீனாவின் பாரம்பரிய முறையில் எண்ணெய் வர்ணங்களில் வரையப்பட்ட ஓவியங்களும் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சீனாவின் கலாசார, தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், பத்திரிக்கை, வெளியீடு போன்றவற்றிற்கு பொறுப்பான தலைமை அதிகாரி செய் வொய் குறிப்பிட்டுள்ளார்.