Sep 12

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் லுலா போட்டியிடமாட்டார்!

சிறையிலிருக்கும் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லுலா த சில்வா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அறிவித்துள்ளார்.

பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேரிதலில் லுலாவிற்கான வேட்பு மனுவினை அவருடைய ஆதரவாளர்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நிராகரித்திருந்தது.

எனினும், லுலாவின் வழக்கறிஞர் குறித்த வழக்கினை மேன்முறையீடு செய்யவிருந்த வேளையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) லுலா  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென தெரிவித்ததாக தொழிலாளர் கட்சியின் தலைவர் க்ளெய்சி ஹொஃப்மேன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு பதிலாக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஃபெர்னாண்டோ ஹடாத், ஜனாதிபதி வேட்பாளராக தங்கள் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடுவாரென லுலா குறிப்பட்டதாக க்ளெய்சி ஹொஃப்மேன் பிரதான சிறைச்சாலைக்கு வெளியில் கூடியிருந்த ஊடகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

சவோ பவுளோ நகரத்தின் முன்னாள் முதல்வரான ஃபெர்னாண்டோ ஹடாத் (வயது-55), ஏற்கனவே தொழிலாளர் கட்சி உறுப்பினர்களினால் லுலாவின் மனு நிராகரிப்பிற்குப் பின்னர் ஜனாதிபதி தமது கட்சியின் வேட்பாளராக போட்டியிட தெரிவுசெய்யப்பட்டவராவார்.

முன்னாள் ஜனாதிபதி லுலா, ஊழல் குற்றங்களுக்காக 12 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அரசியல் கைதியாக சிறைவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.