Mar 16

மீனவர் படுகொலை குறித்து இலங்கை விசாரணை நடத்தும்: சுஷ்மா சுவராஜ்

தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு அருகே மார்ச் 6-ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ (21)என்ற மீனவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அதுகுறித்து மக்களவையில் வியாழக்கிழமை பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ''எல்லாத் தருணங்களிலும் இந்திய மீனவருக்கு, அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து இலங்கையிடம் பேசியுள்ளோம்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்கத் தேவையான அடைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.

அத்துடன் இலங்கைக் கடற்படையிடம் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்'' என்றார்.

தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது