Sep 10

கைவிடப்பட்டிருந்த கிணற்றிலிருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு

மன்னார்- முருங்கன், கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியிலுள்ள கிணற்றினுள் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்.


கடந்த புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

“குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர்  கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார்.

அதன் போது அக்காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் வேளையில் கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்குள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கிணற்றினுள் கிடந்த அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.