Sep 10

தமிழ் தேசிய கூட்டமைப்பு இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்துள்ளது!

தமிழ் தேசிய கூட்டமைப்பு – த.தே.கூ. என்பது ஓர் பேச்சு பொருளாகவோ, அல்லது காட்சி பொருளாகவோ, இல்லையேல் சிலரது சுயநலத்திற்கு வித்திடும் திடலாகவோ இருக்க முடியாது. தமிழர்களது தாயாக பூமியில் வாழும் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மட்டுமல்லாது, தங்களது தாயாக பூமியில் பற்று வைத்து, தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு உறுதுணையாக பல தசாப்தங்களாக சேவை செய்து வரும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களும் த.தே.கூ.ன் சரித்திரத்தில் பின்னி பிணைந்தவர்கள்;.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களது இறுதி மூச்சு. இதன் மூலமே தமிழர் தாயாக பூமிக்கு ஓர் உருப்படியான அரசியல் தீர்வை எட்ட முடியும் என்பதை இறுக்கமான கொள்கை, தமிழின பற்று, கொண்டவர்கள் அறிவார்கள். இதற்கு காரணங்கள் பல! தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கென ஓர் சரித்திரம் உண்டு. இவை பற்றி இங்கு எழுதித்தான் மற்றவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மிக சுருக்கமாக, 1972ம்ஆண்டு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி – த.ஐ.வி.மு. ஆரம்பிக்கபட்டது. துர்அதிஸ்டவசமாக, இது ஓர் தனிநபரின் கைப்பொம்மையாக 2004ம் ஆண்டு மாற்றமடையும் வரை, 2001ம் ஆண்டில் த.தே.கூ.தோற்றம் பெற்றிருந்தாலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள  த.ஐ.வி.மு.ன் பெயரிலேயே பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் நீண்டகாலமாக பதிவில் உள்ள  பழமைவாய்ந்த தமிழரசு கட்சியின் பெயரலேயே 2004ம் ஆண்டு முதல், த.தே.கூ.பினர் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

அன்றிலிருந்து இக்கட்சியின் முக்கியஸ்தர்கள், அங்கத்தவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், சிங்கள பௌத்த (சி.பெ) வாதிகளிடமிருந்து அனுபவித்தவை, அனுபவிப்பவை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மூன்று பாரளுமன்ற உறுப்பினர்கள் உட்பட த.தே.கூ. ஆதரவாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேறு சிலர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டும், கொலை மிரட்டல் துண்புறுத்தல், விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்னர். சுருக்கமாக கூறுவதனால் த.தே.கூ.பு என்பது இரத்தம் சிந்தி பல உயிர் தியாகங்களினால் வளர்க்கப்பட்ட சரித்திரம் கொண்ட அரசியல் கட்சி.

த.தே.கூ. யார் உருவாக்கினார்கள், என்ன காரணத்திற்காக நோக்கத்திற்காக உருவாக்கினார்கள் என்பதை பலர் சிந்திப்பதில்லையென்பது மிகவும்  கவலைக்குரிய விடயம்.

போராட்ட காலத்தில் த.தே.கூ.னர் எவ்வளவு சதூர்த்தியமாகவும் துள்ளியமாகவும் செயற்பட்டாளார்கள் என்பதை யாவரும் சிந்திக்க வேண்டும். த.தே.கூ.ன் தோற்றத்திற்கு முக்கிய பாத்திரம் வகித்த பலர் இன்று உயிருடன் இல்லாவிடிலும், அவர்களது தமிழின பற்றின் தியாகங்களை தமிழினம் மறக்க முடியுமா? இவர்கள் இல்லாத காரணத்திற்காக, த.தே.கூ.பை அழிக்க வேண்டுமா?

இன்று, த.தே.கூ.ல் சாவாரி செய்பவர் பலர், தமது சுயநல தேவைகளிற்கு பாவிப்பவர்கள் சிலர் என்பதை யாவரும் அறிவர். அப்படியானால், ஜனநாயக விதிமுறைகளிற்கு அமைய த.தே.கூ. இயங்கவில்லையா என்ற கேள்வி உருவாகிறது. இவற்றை வேறு விதமாக கூறுவதனால், கூட்டு முயற்சிகள் கூட்டு தீர்மானங்கள் குழு நடவடிக்கைகள் குழு முடிவுகள் இக்கட்சியில் இல்லையா என்ற கேள்வி இன்று பரவலாக வினாவப்படுகிறது. த.தே.கூ.ன் அறிக்கைகள், பத்திரிகை செய்திகள், உரைகள் ஆகியவற்றை தனிப்பட்ட நபர் யாரும் தன்னிட்சையாக செய்வதற்கு இக் கட்சியின் செயற்குழு பொதுகுழு அனுமதிக்கிறதா என்ற கேள்வி த.தே.கூ.ன் ஆதாரவாளர்களிடையே நிலவுகிறது.

2009ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுற்றதை தொடர்ந்து, அரசியல் அனாதைகளாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு வாழ் மக்கள், தமக்கு என்றோ ஒரு நாள் ஒளி தரவுள்ள த.தே.கூ.பை நடுத்தெருவில் தூக்கி எறிந்துவிட்டு செல்வது என்பது, எமது இனத்தை நாமே அழிக்கும்  தற்கொலைக்கு சமனனாது.

தமிழ் மக்களை பிரித்து ஆளுவதற்கான திட்டம், ராஜதந்திரம், பாரீய நிதி உதவியுடன் நீண்ட நோக்குடன் செயற்படும் சிங்கள பௌத்த (சி.பெ.) அரசுகளினால் நடைமுறை படுத்தப்படுகிறது. இது இன்று நேற்று அல்லா, பல தசாப்தங்களாக நடைபெறுகிறது. சி.பெ.வாதிகளின் இவ் யுத்திக்குள், தமிழ் மக்களில் பலர், தெரிந்தோ தெரியாமல் மாண்டுள்ளனர்.

முன்பு தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கென்ற போர்வையிலும், தற்பொழுது தீவிரவாத கொள்கையை கொண்ட தமிழர்களை ஒதுக்குவது என்ற சாட்டு போக்கிலும், இவை நடைமுறை படுத்தப்படுகிறது. இவை நாட்டில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் பரவலாக நடைபெறுகிறது. அப்படியானால், கடந்த ஏழு தசாப்தங்களிற்கு மேலாக நடைபெற்று வரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமை போராட்டம் முடிவிற்கு வருகிறதா என்ற கேள்வி இன்று சிறுவர் சிறுமிகள் உட்பட முதியோர் வரை காணப்படுகிறது.

‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’, ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தில், தோன்றிய எமது மூத்த தமிழ்’ என்ற வீர வசனங்கள் இன்று இலங்கைதீவில் என்னவாகிறது?

நீண்ட சிந்தனையுடனான திட்டமிடல், சுயநலம் அற்ற அர்பணிப்பு, விடமுயற்சி, சொல் முன் செயல், மொழிபற்று ஆகியவற்றை கொண்ட தமிழரால், எமது அரசியல் உரிமைகளை தொடர்ச்சியாக மறுத்து வரும் அல்லது காலம்கடத்தி நிற்கும் சிங்கள பௌத்த அரசை, சரித்திரம் கொண்ட அரசியல் கட்சியான த.தே.கூ. மூலம் ஆட்டம் காண வைக்க முடியும்.

எப்படியாக?

த.தே.கூ.க்கு சவலாக இன்னுமொரு அரசியல் கட்சியை ஆரம்பிப்பதோ, அல்லது தூசி படிந்து காணப்படும் இன்னுமொரு தமிழ் அரசியல் கட்சியிலோ அல்லது சிங்கள இனவாத கட்சிகளுடன் இணைவாது, இதற்கு தீர்வாக இருக்கு முடியாது. இப்படியாக செயற்பட முனைவது நீண்ட சிந்தனையற்ற மிலேச்சதனமாகும்.

ஆகையால் கட்சிக்குள் ஜனநாயக விதிமுறைகளை பலப்படுத்தி, இதன் மூலம் சி.பெ.அரசுகளின் கொள்கைகளுக்கு சார்பாக தன்னிட்சையாக செயல்படுபவர்கள் மீது, கட்சி விதிமுறைகளிற்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்விதி முறை மூலம், கூட்டு முயற்சிகள் குழு நடவடிக்கைகள் கூட்டு முடிவுகள் என்பவற்றுடன் - த.தே.கூ.ன் அறிக்கைகள், பத்திரிகை செய்திகள், உரைகள் என்பவற்றை யாரும் தமது தனிப்பட்ட ரீதியாக செயற்படுவது கட்டுப்படுத்தப்படும் கட்டத்தில்,  த.தே.கூ. என்ன காரணத்திற்காக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அது சாத்வீகமாகும்.

சி.பெ.அரசுகளிற்கு ஆதரவான தனிநபர் முடிவுகள் அறிக்கைகள் உரைகள் யாவும், இக் கட்சிக்குள் மட்டுமல்லாது, த.தே.கூ.ஆதரவாளர்களை நாட்டிலும் புலம் பெயர் தேசத்திலும் திகில் கொள்ள வைத்துள்ளது என்பதை இக் கட்சியின் முக்கியஸ்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

த.தே.கூ.க்குள் அதனது ஜனநாயக விதிமுறைகளை பலப்படுத்தாது, அல்லது இவற்றை உரியமுறையில் நடைமுறைப்படுத்தி தமது நிலைகளை சீர்செய்யாது, இக்கட்சியிலிருந்து வெளியேறியவர்களது தவறான சாணக்கியம், இன்று த.தே.கூ.க்குள் தனிநபர் முடிவுகளிற்கு வழிவகுத்துள்ளது. அவர்களது சிந்தனையும் முடிவுகளும் சிறுபிள்ளை தனமானது என்பதை நாம் முன்கூட்டியே அறிவோம். ‘கெடு குடி சொல் கேளாது’ என்பதற்கு இவர்கள் நல்ல ஊதாரணம். இதே தவறை மிகவும் அனுபவம், திறமையான சாணக்கியம் ராஜதந்திரம் படைத்த திரு விக்கினேஸ்வரன் செய்ய மாட்டார் என்பது தமிழ் மக்களின் ஏகபோக விருப்பம்.

நீண்ட சிந்தனையற்ற செயற்பாடு, இன்று புலம் பெயர் தேசங்களில், பல தமிழ் அமைப்புகளிடையே காணப்படுகிறது. இதற்கான காரணிகளை ஆராயும் வேளையில், “கறையான் புற்றெடுக்க, பாம்பு வந்து குடி கொண்ட நிலையை”நாம் காணகூடியதாகவுள்ளது. இதே நிலைக்கு த.தே.கூ. தள்ளப்படுவதற்கு கூட்டமைப்பின் பங்காளர்கள், ஆதரவாளர்கள் அனுமதிக்க கூடாது. அப்படியாக அனுமதிக்கப்பட்டால், சரித்திரம் கொண்ட த.தே.கூ. தவறான பதையில் இட்டு செல்வது மட்டுமல்லாது, சர்வதேசத்திற்கு தமிழினத்தின் அரசியல் உரிமை பற்றிய விடயங்கள் மிகவும் தவறான முறையில் கொடுக்கப்படும்.

உண்மையை பேசுவதனால், ஒரு சிலரின் தன்னிட்சையான செயற்பாட்டிற்காக மாற்று கட்சி உருவாக்குவதும், சிங்கள இனவாத கட்சிகளில் தமிழர்கள் அங்கத்துவம் பெறுவதும், தமிழர்களது அரசியல் உரிமை போராட்டத்தை மேலும் நலிவடைய செய்வது மட்டுமல்லாது, எமது இனத்திற்கு நாம் செய்யும் தூரோகம் என்பதை, த.தே.கூ.ல் தனிநபர் செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

த.தே.கூ. ஒர் தனிநபர் கட்சியோ அல்லது தனிநபர் த.தே.கூ. அல்ல என்பதை த.தே.கூ. ஆதரவாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு சிலரின் தவறுகளிற்காக இரத்தம் சிந்தி உயிர் தியாகங்கள் செய்து வளர்க்கப்பட்ட த.தே.கூ. யாரும் வேறுப்பது சிறுபிள்ளை தனம்.

தற்போதைய சவால்கள்

செயற்பாட்டாளர்கள், விசேடமாக தமிழ் அரசியல்வாதிகள் ஒர் நீண்ட நோக்குடனான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அவர்களது நீண்ட குறுகியகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில், சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கு சமனாக இருக்க வேண்டுமேயல்லாது, அவர்களிடம் மண்டியிட வேண்டிய அவசியமில்லை.

சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை செய்து தான் எமது உரிமைகளை பெற முடியும் என்பது ஓர் புதிய கண்டு பிடிப்பு அல்ல. இதை தான் தமிழீழ விடுதலை புலிகள் உட்பட, தந்தை செல்வாவும் மற்றைய அரசியல்வாதிகளும் மிக நீண்ட காலமாக மேற்கொண்டிருந்தனர். ஆனால் சி.பெ. ஆட்சியாளர்கள், தமிழ் மக்களை கடந்த ஏழு தசாப்தங்களிற்கு மேலாக ஏமாற்றி வருவதுடன், தமிழ் மக்களை ஓர் தூசாகத் தன்னும் கருதுவதில்லை என்பதை நாம் சர்வதேசத்திற்கு கூற கடமைப்பட்டுள்ளோம். இதேவேளை, சர்வதேசத்தின் அனுசாரணையுடன் தான் எமது அரசியல் தீர்வை சி.பெ.வாதிகளிடமிருந்து பெற்று கொள்ள முடியும் என்ற யாதார்த்தை, கன்னி அரசியல்வாதிகளும் அரசியல் பயிற்சியாளர்களும் தெரிந்து  கொள்ள வேண்டும்.

இலங்கைதீவில், பாரளுமன்றத்திற்கும் மாகாண சபைகளிற்குமிடையில் பாரீய இடைவெளிகள் உள்ளது என்பதை பல தமிழ் அரசியல்வாதிகள் அறியவில்லை போலும். மாகாண சபையின் செயற் திட்டங்கள் ஓர் மாகாண எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடு. ஆனால் பாரளுமன்றம் என்பது சர்வதேசத்தின் பார்வையின் கீழ் இயங்கும் ஓர் அரசியல் மேடை. பாரளுமன்ற மேடையை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல்வாதிகள் சரியான முறையில் பாவிப்பதில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

கூடிய விரைவில் வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல்கள் நடைபெற கூடிய சாத்வீக கூறுகள் காணப்படுகின்றன. இவ் வேளையில், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக திரு. விக்கினேஸ்வரனை த.தே.கூ.நிறுத்த தவறும் பட்சத்தில், அவ் முடிவு தமிழ் மக்களிடையே ஓர் பாரீய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. திரு விக்கினேஸ்வரன் அரசியலிற்கு புதியவராக காணப்பட்டாலும், இவரது ஆளுமையை யாரும் குறைத்து கணிப்பிட முடியாது. இவர் உண்மையில் சிறிலங்கா பாரளுமன்றத்திற்கு உரியவர். சிங்கள பௌத்தவாதிகளிற்கு சரிசமானக இருந்து விடயங்களை கையாளும் திறமை படைத்தவர்.

ஆகையால், அடுத்த பாரளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை, திரு. விக்கினேஸ்வரன் மீண்டும் வடமாகாண சபையின் முதலாமைச்சர் பதவியில் த.தே.கூ.சார்பாக பதவி வகிக்க ஒழுங்குகள் நடைபெற்றால், வடமாகணத்தில் ஓர் அரசியல் பூகம்பத்தை தவிர்க்க முடியும். சிலரின் சுயநலத்தின் அடிப்படையில் இது தவறும் பட்சத்தில், தற்போதைய நிலையில் திரு. விக்கினேஸ்வரன் எந்த அரசியல் கட்சியையும் ஆரம்பிக்காது, தூசி படிந்து நிற்கும் கட்சிகளையும் சாராது, சுயேட்சையாக முதலாமைச்சர் பதவிக்கு போட்டியிடுவரேயானால், இவர் நிட்சயம் வடமாணத்தில் மாபெரும் வெற்றியை அடைவார். இவ் பரீதாப நிலை, சரித்திரம் கொண்ட த.தே.கூ.பிற்கு தேவையா?

இதேவிதமாக, தற்பொழுது இனவாத அடிப்படையில் சர்ச்சைக்குரிய திருமதி விஜயகலா மகேஸ்வரன், அடுத்த பொதுதேர்தலில், யாழ் மாவட்டத்தில் சிங்கள இனவாத கட்சியை சாராது, சுயேட்சையாக போட்டியிடுவரேயானால், விஜயகலா நிட்சயம் வெற்றி பெறுவார். இவ்விடயத்தை திருமதி விஜயகலா மகேஸ்வரன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கைதீவின் வரலாற்றில், சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது என்பது அண்மை காலங்களில் அறவே காணப்படவில்லை. ஆனால் வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியலை பொறுத்த வரையால் - யாதார்தங்கள், உண்மைகளை, நடைமுறைகளை வெளிப்படையாக கூறிவரும் திரு விக்கினேஸ்வரனும், திருமதி விஜயகலா மகேஸ்வரனும் எதிர்வரும் தேர்தல்களில் சுயேட்சையாக யாழ் மாவாட்டத்தின் வேட்பாளர்காக நிற்பார்களேயானால் அவர்கள் நிட்சயம் வெற்றி பெறுவார்கள்.

இவை நியாயமானவையா?

வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது இனத்தின் அரசியல் தீர்விற்காக தமது பாரளுமன்ற பிரதிநிதிகளுக்கு வாக்களித்துள்ளனர். சில தனிநபர் முடிவின் காரணமாக, பாரளுமன்றத்தில் இவ் உறுப்பினர்களினால் மக்களிற்காக ஒர் உருப்படியான உரையையோ, அல்லது உருப்படியான காரியம் எதையும் செய்யாவில்லை என்பது இவர்களுக்கு வாக்களித்தவர்களினால் கூறப்படும் குறைகளில் ஒன்று.

மிக நீண்ட காலமாக நடைபெறும் காணமல் போயுள்ளோரது குடும்பத்தவர்கள் பெற்றோர்களது போராட்டங்கள் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் யாவரும்  அசட்டையாக இருப்பதாக இன்னுமொரு குறை வலுவாகவுள்ளது. நாட்டில் மக்கள் உணவு, உடை, தாங்குமிடம், வேலைவாய்பு ஒழுங்காக இல்லாது தவிப்பதற்கு இவர்கள் உதவுவதில்லை என்ற வேறு ஒரு குற்றச்சாட்டு சகல தமிழ் அரசியல்வாதிகள் மீது உள்ளது. இவ் நிலையில், புலம் பெயர் தேசங்களில், சி.பெ.அரசுகளிற்கு வால் பிடிப்போராது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சிலர் கலந்து கொண்டு, தனிநபர்களை திருப்தி படுத்துவது நியாயமானதா? 

த.தே.கூ.பின் கொள்கைக்கு எதிராக தனிநபர்கள் நடப்பதாக கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மிக அணமையில் ஆதங்கம் தெரிவித்திருப்பது, கூட்மைப்பிற்குள் ஜனநாயக நடவடிக்கைகள் நிலவுகிறதா என்ற கேள்விக்கு மீண்டும் உரம் சேர்க்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, பாரளுமன்றத்தில் த.தே.கூ. எதிர்கட்சியாக உள்ளது. இதனால் வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்பது பலரது ஆதங்கம். இலங்கைதீவில் தமிழ் கட்சி ஒன்றே எதிர்கட்சியாக உள்ளதாக சி.பெ.ஆட்சியாளர்கள் சர்வதேச ரீதியாக பிரச்சாரம் செய்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். த.தே.கூ.ன் எதிர்கட்சி பதவியினால் பயன் அடைவது சி.பெ.வாதிகளே.

“தெருச் சண்டை கண்ணுக்கு குளீர்ச்சி” என்பது போன்று, இன்று வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களிடையே, விசேடமாக தமிழ் அரசியல்வாதிகளிடையே இடம்பெறும் பூசல்கள் சர்ச்சைகள் யாவும் சி.பெ.வாதிகளின் கண்ணிற்கு குளீர்ச்சியாகவுள்ளது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். (முற்றும்)

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்