Sep 08

ரொறன்ரோவில் புதிய தமிழ் பங்குத்தந்தை நியமனம்

ரொறன்ரோ பெரும்பாகத்தின் தமிழ் கத்தோலிக்க பங்குக்கு புதிய குருவானவர் நியமிக்கப்படுகிறார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, செப்ரம்பர் 16ம் திகதி மாலை 4:30 மணிக்கு, அருட்திரு சாள்ஸ் கொலின்ஸ் அவர்கள், ரொறன்ரோ ஆயர் அவர்களால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவுள்ளார்.

தாயகத்தில் பல முக்கிய பங்குகளின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அனுபவத்துடன், இளைஞர் பேரவையின் பொறுப்பாளராகவும், யாழ் மடுத்தீனார் குருமட அதிபராகவும், கத்தோலிக்க அச்சகத்தின் பொறுப்பாளராகவும் இன்னும் பல முக்கிய பொறுப்புக்களிலும் சிறந்த பணியாற்றிய அருட்திரு சாள்ஸ் கொலின்ஸ் அவர்கள், இலங்கைக்கு வெளியே மிக அதிக தமிழ் கத்தோலிக்கர்கள் செறிந்து வாழுகின்ற ரொறன்ரோ பங்கின் பங்குத்தந்தையாகப் பணியேற்கிறார்.

ரொறன்ரோ பெரும்பாகத்தின் தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மீகப் பணிகளைக் கவனிப்பதற்காக, முழுநேர தமிழ் பங்காக தூய ஆரோக்கிய அன்னை பங்கு கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 131 Birchmount Road (Birchmount & Danforth Ave) நடைபெறும் திருப்பலியில் ரொறன்ரோ ஆயர் கலந்துகொள்வதால், அனைத்து தமிழ் மக்களும் நேரில் கலந்து சிறப்பிக்கும்படி அழைக்கப்படுகிறீர்கள்.