Sep 08

அலிபாபா நிறுவன நிர்வாகத் தலைவர் பதவி விலக தீர்மானம்!

சீனாவின் அலிபாபா இலத்திரனியல் வர்த்தக நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜேக் மா நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் மூன்றாவது மிகப் பெரிய பணக்காரரான ஜேக் மா திகழ்கிறார் அவரது இராஜினாமா தொடர்பான அறிவிப்பு இன்று உலகில் பேசுபொருளாக அமைந்துள்ளது.

பதவியிலிருந்து விலக தீர்மானித்திருக்கும் தினத்தன்று அவர் தனது 54ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என்று அவரைப் குறிப்பிடுவதை விட, சமூக சேவையாளர் ஜேக் மா என்று விழிப்பதே பொருத்தமானதென நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

400 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான குறித்த நிறுவனமானது, உலக நாடுகளில் ஒன்லைன் விற்பனை, திரைப்படத் தயாரிப்பு, க்ளவுட் தரவு சேமிப்புச் செயற்பாடு ஆகியவைகளை மேற்கொள்கின்றது.

விரைவில் ஓய்வுபெறவிருக்கும் ஜேக் மெக், ஊடகங்களுக்கு நேர்காணலொன்றினை வழங்கியபோது, தான் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் என்றும் அலிபாபா நிறுவனத்திலிருந்து பதவி விலகிய பின்னர் தனது ஆசிரியர் பணியினைத் தொடரப் போவதாகவும் குறிப்பட்டுள்ளார்.

மேலும் பில் கேட்சின் மைக்ரோ சொஃப்ட் நிறுவனம், தனது மிகப் பெரிய முன்மாதிரி என்றும் பில் கேட்ஸ் போன்று உலகப் பணக்காரராக தான் ஒரு போதும் வரப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து, தான் அலிபாபாவின் தலைமை அதிகாரியாக இருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட சேவைகளை விட ஆசிரியராக இருக்கும்போது மக்களுக்கு அதிகமான சேவைகளை ஆற்றமுடியும் என்றும் தனக்கு கற்பித்தல் செயற்பாடு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அலிபாபா நிறுவனத்தினை ஆரம்பிக்க முன்னர் ஜேக் மா, சீனாவின் செஜியாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் ஹங்சவ் நகர பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி விரிவுரையாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.