Sep 08

கத்திக் குத்துக்கு இலக்கான ஜனாதிபதி வேட்பாளருக்காக ஆதரவாளர்கள் பிரார்த்தனை!

பிரேசில் ஜனாதிபதி தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒருவரான ஜய்ர் பொன்சொனாரோ மீதான கொலை முயற்சியினைத் தொடர்ந்து, வைத்தியசாலைக்கு வெளியே இரவு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளனர்.


பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பழைமைவாதக் கட்சியின் வேட்பாளர் ஜய்ர் பொன்சொனாரோ கத்திக் குத்துக்கு இலக்கானமையானது, பிரேசில் குடியரசான கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் பாரிய குழப்பமாக நோக்கப்படுகிறது.

இந்நிலையில், சவோ பவுலோ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தங்கள் பிரதிநிதி விரைவில் குணமடைய வேண்டுமென்று அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் வைத்தியசாலைக்கு வெளியில் ஒன்றுகூடி நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முழுவதும் விழித்திருந்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

பொன்சொனாரோ இரண்டு மாதங்கள் தொடர்ந்து படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் எனவும், பொன்சொனாரோவின் ஆதரவாளர்களின் தீவிர பிரார்த்தனையினால் அவர் விரைவில் பூரண குணமடைவாரென நம்புவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸ் ஜூய்ஸ் டி ஃபோரா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவத் தலைவரான ஜய்ர் பொன்சொனாரோ மூன்று தசாப்தங்களாக காங்கிரஸ் உறுப்பினராக சேவையாற்றி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.